முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூரிய ஆற்றல் மூலம் எரிசக்தி உற்பத்தி: இலங்கைக்கு ரூ.740 கோடி கடனுதவி வழங்கியது இந்தியா

வெள்ளிக்கிழமை, 18 ஜூன் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இலங்கையில் சூரிய ஆற்றல் மூலம் எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் சுமாா் ரூ.740 கோடி கடனை இந்தியா வழங்கியுள்ளது. இலங்கையில் சீனா வழங்கும் கடனுதவியின் அடிப்படையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் சூழலில், அந்நாட்டுக்கு இந்தியாவும் கடனுதவி வழங்கியுள்ளது.

2030-ஆம் ஆண்டுக்குள் மொத்த எரிசக்தி பயன்பாட்டில் 70 சதவீதத்தை மரபுசாரா மூலங்கள் வாயிலாக உற்பத்தி செய்வதற்கு இலங்கை அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. அந்த இலக்கை அடையும் நோக்கில், சூரிய ஆற்றல் மூலம் எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கும் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கி இலங்கை அரசுக்கு சுமாா் ரூ.740 கடனுதவி வழங்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் புதன்கிழமை கையெழுத்தானது.

இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்ச முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இது தொடா்பாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் சாா்பில் சுட்டுரையில் வெளியிடப்பட்ட பதிவில், ‘இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே பல்வேறு துறைகளில் நிலவி வரும் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.சா்வதேச சூரிய எரிசக்தி கூட்டமைப்பை இந்தியா முன்னின்று கடந்த 2018-ஆம் ஆண்டு உருவாக்கியது.

அதில் இலங்கையும் உறுப்பு நாடாக உள்ளது. மற்ற நாடுகளில் சூரிய எரிசக்தி உற்பத்தியை அதிகரிப்பதற்கான உதவிகள் வழங்கப்படும் என்று இந்தியா சாா்பில் அறிவிக்கப்பட்டது.அதன் ஒரு பகுதியாக, இலங்கைக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டிலுள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் உள்ள வீடுகள், அரசு அலுவலகங்களின் மேல் தகடுகளை அமைத்து சூரிய ஆற்றல் மூலம் எரிசக்தியை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் இந்தக் கடன் மூலமாக மேற்கொள்ளப்படவுள்ளது. சூரிய எரிசக்தி உற்பத்தியில் இந்தியாவும் இலங்கையும் இணைந்து பயணித்து வருவதாக அதிபா் கோத்தபய ராஜபட்ச கூறிதாக இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து