முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மில்கா சிங்: அறிந்ததும் - அறியாததும்: அகதியாய் வந்தவர், தங்க மகன் ஆனார்

சனிக்கிழமை, 19 ஜூன் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : தடகளத்தில் ஒரு சகாப்தத்தை படைத்தவர் மில்கா சிங். இந்தியாவிற்கு அகதியாய் வந்தவர், தன் திறமையால் தங்க மகனாக உயர்ந்தார்.

பாக். பிரிவினை...

1935-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8-ம் தேதி தற்போதைய பாகிஸ்தானில் பிறந்தார் மில்கா. 1947-ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது மில்காவின் பெற்றோர்கள் கலவரத்தில் கொல்லப்பட்டார்கள். அப்போது ஓர் அகதியாக ஆயிரக்கணக்கானோரில் ஒருவராக இந்தியாவிற்கு குடிபெயர்ந்தார். 

ஓட்டத்தில் ஆர்வம்...

அதன்பிறகு டெல்லியில் ஒரு உணவகத்தில் வேலைக்கு சேர்ந்தார். அப்போது இந்திய ராணுவத்தில் இருந்து பணி வாய்ப்பு வருகின்றது. அங்கு சென்ற பிறகு தான் ஓட்டப்பந்தயத்தில் ஆர்வம் ஏற்படுகின்றது. பணியில் இருந்து கொண்டே ஓடுவதற்கான பயிற்சியையும் மேற்கொள்கிறார் மில்கா சிங்.

முதல் பதக்கம்...

1958-ம் ஆண்டு காமென்வெல்த் போட்டியில் 400 மீட்டரில் வெற்றிப்பெற்று, இந்தியாவிற்கு முதன்முதலாக "தங்கப்பதக்கம்" பெற்றுக்கொடுத்தார் மில்கா சிங். சுதந்திரமடைந்த பிறகு தடகளப்போட்டியில் தங்கம் பெற்றுக்கொடுத்த முதல் தடகள விளையாட்டு வீரராவார். மீண்டும் அதே ஆண்டு டோக்கியோவில் நடைப்பெற்ற ஆசியப் போட்டியில் 200மீட்டர், 400 மீட்டர் ஓட்டத்தில் கலந்து கொண்டு தங்கம் வென்றார். 1959-ம் ஆண்டு இந்திய அரசின் நான்காவது உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருதும் பெற்றார் மில்கா சிங்.

பறக்கும் சீக்கியர்...

1960-ம் ஆண்டு பாகிஸ்தானில் நடைப்பெற்ற ஓட்டப்பந்தயத்தில் வெறிக்கொண்டு மின்னல் வேகத்தில் ஓடி வெற்றிப்பெற்றதால், “பறக்கும் சீக்கியர்” என்று புகழப்பட்டார். 1962-ம் ஆண்டு ஜகர்த்தா என்னுமிடத்தில் நடைப்பெற்ற ஆசியப்போட்டியில் 400மீ ஓட்டத்தில் தங்கப்பதக்கம் பெற்றார். 1964-ம் ஆண்டு நடந்த கொல்கத்தா போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளார். இவரே தன் வாழ்க்கை வரலாற்றை “The Race of My Life” என்ற புத்தகமாக எழுதியுள்ளார்.

திரைப்படமாக... 

மில்கா சிங்கின் வாழ்க்கை வரலாறு பாலிவுட்டில் திரைப்படமாக வெளிவந்து பெரும் வெற்றிப்பெற்றது. "பாக் மில்கா பாக்" (ஓடு மில்கா ஓடு) என்ற பெயரில் வெளியான இத்திரைப்படத்தில் பர்ஹான் அக்தர், மில்காவின் பாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். 2013-ல் வெளியான இத்திரைப்படம் வசூலிலும் சாதனைப் படைத்தது. 

நிறைவேறாத ஆசை...

மில்கா சிங்குக்கு ஓர் ஆசை இருந்தது அதுவும் தேசத்துக்காக இருந்தது. 1962-இல் அவர் சொன்னார் "நான் இறப்பதற்குள் ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியா தங்கம் வெல்வதை பார்த்திட வேண்டும்" என்றார். ஆனால் இப்போது வரை அது நிறைவேறவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து