முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாரதா வழக்கில் மம்தாவின் மேல்முறையீட்டு வழக்கு: தன்னைத் தானே விடுவித்து கொண்ட சுப்ரீம் கோர்ட் நீதிபதி

செவ்வாய்க்கிழமை, 22 ஜூன் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : நாரதா வழக்கில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும் பணியில் இருந்து சுப்ரீம் கோர்ட் நீதிபதி அனிருத்தா போஸ், தன்னைத்தானே விடுவித்துக் கொண்டார்.

மேற்கு வங்கத்தில் நாரதா இணையதளம் 2016-ம் ஆண்டு ஸ்டிங் ஆபரேஷன் நடத்தியது. அதில் போலி நிதி நிறுவனம் ஒன்றுக்கு திரிணமூல் காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆதரவாக நடந்து கொள்வதற்குப் பணம் பெற்றனர். இந்தக் காட்சியை நாரதா நிறுவனம் ஸ்டிங் ஆபரேஷன் மூலம் வெளிக்கொண்டு வந்தது. 

இந்த வழக்கை விசாரித்து வந்த சி.பி.ஐ., திரிணமூல் காங்கிரஸ் அமைச்சர்கள் ஹக்கிம், சுப்ரஜா முகர்ஜி உள்ளிட்ட 4 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் தனகரிடம் அனுமதி கோரியது. அதற்கு கவர்னரும் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, அமைச்சர்கள் பிர்ஹத் ஹக்கிம், சுப்ரதா முகர்ஜி, எம்.எல்.ஏ. மதன்மித்ரா, முன்னாள் அமைச்சர் சோவன் சாட்டர்ஜி ஆகியோரை சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

மேற்கு வங்க அமைச்சர்கள், எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டதை அறிந்த முதல்வர் மம்தா பானர்ஜி, சட்ட அமைச்சர் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் சி.பி.ஐ. அலுவலகம் முன் அமர்ந்து தர்ணா செய்தனர். திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏராளமான தொண்டர்களும் திரண்டு சி.பி.ஐ. அலுவலகத்தை நோக்கி போராட்டம் நடத்தி, கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டு, ஜாமீன் வழங்கப்பட்டது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் கொல்கத்தா ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்து, ஜாமீனைத் திரும்பப் பெற்றனர். அதையடுத்து முதல்வர் மம்தா பானர்ஜி, தங்கள் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் சுமத்திய குற்றச்சாட்டுகள் குறித்து உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார். எனினும் மனுவை உடனடியாக விசாரிக்க கொல்கத்தா ஐகோர்ட் மறுத்து விட்டது. 

அதை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் மம்தா மேல்முறையீட்டு மனுவை நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று நீதிபதிகள் ஹேமந்த் குப்தா மற்றும் அனிருத்தா போஸ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. எனினும் அந்த மனுவை விசாரிக்கும் பணியில் இருந்து நீதிபதி அனிருத்தா போஸ் தன்னைத்தானே விடுவித்துக் கொண்டார். இதையடுத்து வேறொரு நீதிபதிகள் அமர்வுக்கு அந்த மனு மாற்றப்பட்டது. சுப்ரீம் கோர்ட் நீதிபதி அனிருத்தா போஸ் முன்னதாகக் கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து