முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செப்டம்பரில் நீட் தேர்வு நடைபெற வாய்ப்பு?

சனிக்கிழமை, 10 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி: மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

மருத்துவ படிப்புகளுக்கு மாணவ, மாணவிகள் அகில இந்திய அளவில் நீட் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள்.  கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு நீட் தேர்வு நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ம் தேதி நீட் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது.  தற்போது நடப்பாண்டுக்கான மருத்துவ படிப்புகளுக்கு மாணவ, மாணவிகளை தேர்வு செய்ய ஆகஸ்டு 1-ம் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நீட் தேர்வுக்காக விண்ணப்பம் செய்யும் நடவடிக்கைகள் இன்னும் தொடங்கப்படவில்லை.

பொதுவாக நீட் தேர்வுக்கு மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்க தேர்வு தேதிகளில் இருந்து 60 நாட்களுக்கு முன்பு அவகாசம் வழங்கப்படும். ஆனால் தற்போது இதுவரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால் நீட் தேர்வு தொடர்பாக நாடு முழுவதும் மாணவர்களிடம் மாறுபட்ட கருத்துகளும், எதிர்பார்ப்புகளும் நிலவுகிறது.

இதற்கிடையே கொரோனா 2-வது அலை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. என்றாலும் இன்னமும் முழுமையாக கொரோனா அச்சுறுத்தல் விலகவில்லை. இதன் காரணமாக நீட் தேர்வை சிறிது நாட்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று மாணவர்கள் தரப்பில் இருந்து சமூக வலைதளங்கள் மூலம் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. 

இந்த நிலையில் நீட் தேர்வை ஒத்திவைப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக தேசிய தேர்வு கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வது தொடர்பாக மாணவர்கள் மத்தியில் தொடர்ந்து எதிர்பார்ப்புகள் இருப்பது எங்களுக்கு தெரியும். என்றாலும் மாணவர்களின் பாதுகாப்பு முக்கியமானதாகும்.  அதே சமயத்தில் மருத்துவக் கல்லூரிகளில் உரிய நேரத்தில் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டியதும் அவசியமாகும். இந்த இரண்டு அம்சங்களையும் கருத்தில் கொண்டு நீட் தேர்வு நடத்துவது தொடர்பாக முடிவு செய்யப்படும்.  தற்போதைய சூழ்நிலையில் நீட் தேர்வு தேதியை ஒத்திவைக்க வாய்ப்புள்ளது.  இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

கொரோனா அச்சுறுத்தல் இன்னும் சில வாரங்களில் மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே நீட் தேர்வு தேதி செப்டம்பர் முதல் வாரத்துக்கு ஒத்திவைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மத்திய சுகாதாரத்துறைக்கும், கல்வித்துறைக்கும் அமைச்சர்கள் மாற்றப்பட்டுள்ளனர். 

கல்வித்துறை அமைச்சராக  தர்மேந்திர பிரதானும், சுகாதாரத்துறை அமைச்சராக மன்சூக் மான்ட வியாவும் சமீபத்தில் பொறுப்பேற்றுள்ளனர். அவர்களிடம் ஆலோசனை நடத்திய பிறகு நீட் தேர்வு குறித்தும், நீட் தேர்வுக்கான விண்ணப்பங்கள் தொடங்குவது குறித்தும் முறையான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வுக்கான முடிவுகள் அடுத்த மாதமே வெளியிடப்பட்டது. அதே போன்று இந்த ஆண்டும் நீட் தேர்வு முடிவுகளை ஒரு மாதத்துக்குள் வெளியிட்டு மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர்.

 

அதே போல் ஜே.இ.இ. தேர்வுகள் வருகிற 20-ம் தேதி முதல் ஆகஸ்டு 2-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜே.இ.இ. தேர்வுகள் கம்ப்யூட்டர் மூலம் நடத்தப்படுவதால் மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு வர வேண்டிய அவசியமில்லை. ஆனால் நீட் தேர்வு தாளில் எழுதப்பட வேண்டியது இருப்பதால் தேர்வு மையங்களுக்கு மாணவ, மாணவிகளை வரவைப்பது கட்டாயமாக உள்ளது. இதனால் நீட் தேர்வு ஏற்பாடுகள் தாமதமாகும் சூழ்நிலை உள்ளது.  இந்த ஆண்டு நாடு முழுவதும் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப ஏற்பாடுகளை செய்ய தேசிய தேர்வு கழகம் முடிவு செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து