முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமரின் புதிய அமைச்சரவையில் 90 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் ஆய்வு அறிக்கையில் தகவல்

சனிக்கிழமை, 10 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி: பிரதமர் மோடியின் புதிய அமைச்சரவையில் கிரிமினல் வழக்குகளுடன் 31 சதவீத அமைச்சர்கள் உள்ளனர், 90 சதவீதம் பேர்  கோடீஸ்வரர்களாக உள்ளனர் என ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் கூறி உள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சி அதிகாரத்துக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளது.  கூட்டணி அமைச்சரவையில்  அங்கம் வகித்த சிவசேனா, சிரோமணி அகாலிதளம் கட்சிகள், பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகின. அதைத் தொடர்ந்து அவற்றின் அமைச்சர்கள் அரவிந்த் சவந்த், ஹர்சிம்ரத் கவுர் பாதல் பதவி விலகலாலும், மத்திய அமைச்சர்களாக இருந்த ராம்விலாஸ் பஸ்வான், சுரேஷ் அங்காடி ஆகியோரின் மறைவாலும், காலியிடங்கள் ஏற்பட்டன. இதனால் மூத்த மத்திய அமைச்சர்கள் பலரும் ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளை கவனித்து வந்தனர்.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடக்க உள்ளன. அங்கு பா.ஜ.க. செல்வாக்கை நிலைநிறுத்தும் வகையில் அவற்றுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் அளிக்கிற வகையிலும்,  மேலும் சில கூட்டணி கட்சிகளுக்கு இடம் அளிக்கிற வகையிலும் பிரதமர் மோடி மத்திய மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய அதிரடியாக முடிவு எடுத்தார்.  பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மத்திய அமைச்சரவை கடந்த 7-ம் தேதி அதிரடியாக மாற்றி அமைக்கப்பட்டது. புதிதாக 43 பேர் பதவி ஏற்றுக்கொண்டனர். மூத்த அமைச்சர்கள் 12 பேர் ராஜினாமா செய்ததோடு, புதிதாக 43 பேர் கேபினட் அமைச்சர்களாகவும்,  இணை அமைச்சர்களாகவும் பதவியேற்று  கொண்டனர். இதில் 11 பெண்கள், 6 டாக்டர்கள் , 5 என்ஜினீயர்கள், 13 வக்கீல்கள், 7 பேராசிரியர்கள் என முழுவதும் படித்தவர்களால் நிரம்பியிருக்கிறது மத்திய மந்திரி சபை.

பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் உள்ள 78 அமைச்சர்களில், குறைந்தது 42 சதவீதம் பேர் அவர்கள் மீது கிரிமினல் வழக்குகளை அறிவித்துள்ளனர் என்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்க (ஏடிஆர்)  புதிய ஆய்வு அறிக்கையை ஒன்று சுட்டிக்காட்டுகிறது.  அமைச்சரவையில் மொத்தம் 15 கேபினட் அமைச்சர்கள்  சேர்க்கப்பட்டனர், 28 பேருக்கு இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.  இதன்மூலம், பிரதமர் அமைச்சரவையின்  எண்ணிக்கை இப்போது 78 ஆக உள்ளது.  அதன் விரிவாக்கத்தைத் தொடர்ந்து 17-வது மக்களவையில் உள்ள மாற்றப்பட்ட  புதிய அமைச்சரவையில்  33 மந்திரிகளின்  (42 சதவீதம்) தேர்தல் பிரமாணப் பத்திரங்களை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் ஆய்வு செய்து உள்ளது. இவர்களில், 24 அமைச்சர்கள் (மொத்த  எண்ணிக்கையில் 31 சதவீதம்)  கடுமையான குற்ற வழக்குகள் இருப்பதாக பிரமாண பத்திரத்தில் அறிவித்துள்ளனர் - இதில் கொலை, கொலை முயற்சி அல்லது கொள்ளை ஆகியவை அடங்கும். 

ஏ.டி.ஆர் என்பது ஒரு தேர்தல் உரிமைக் குழுவாகும், இது தேர்தல்களுக்கு முன்னதாக அடிக்கடி வேட்பாளர்கள் பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்து அறிக்கைகளை வெளியிடுகிறது, அரசியல்வாதிகளின் குற்றவியல், நிதி மற்றும் பிற பின்னணி விவரங்களை அறிய அவர்களின் பிரமாண பத்திரங்களின் விவரங்களை அளிக்கிறது.

மேலும், புதிய அமைச்சரவையில் (70 மந்திரிகள்) சுமார் 90 சதவீதம் பேர் பணக்காரர்கள். அதாவது அவர்கள் மொத்த சொத்துக்களை ரூ. ஒரு கோடிக்கு அதிகமாக அறிவித்துள்ளனர் என்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம்  அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

ஜோதிர் ஆதித்ய சிந்தியா (ரூ.379 கோடிக்கு மேல்), பியூஷ் கோயல் (ரூ.95 கோடிக்கு மேல்), நாராயண் ரானே (ரூ. 87 கோடிக்கு மேல்), மற்றும் ராஜீவ் சந்திரசேகர் (ரூ. 64 கோடிக்கு மேல்) ஆகிய நான்கு அமைச்சர்கள் அதிக  சொத்து வைத்துள்ள அமைச்சர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.  அதாவது அவர்கள் ரூ.50 கோடிக்கு மேல் சொத்துக்களை அறிவித்துள்ளனர்.  ஒவ்வொரு அமைச்சரும் சராசரியாக ரூ.16.24 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. 

மிகக்குறைந்த சொத்துக்களை அறிவித்த அமைச்சர்களில்  திரிபுராவைச் சேர்ந்த பிரதிமா பவுமிக் (ரூ.6 லட்சத்துக்கு மேல்), மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஜான் பார்லா (ரூ.14 லட்சத்துக்கு மேல்), ராஜஸ்தானைச் சேர்ந்த கைலாஷ்  சவுத்ரி (ரூ.24 லட்சத்துக்கு மேல்), ஒடிசாவைச் சேர்ந்த பிஷ்வேஸ்வர் துடு  (ரூ.27 லட்சத்திற்கு மேல்), மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த வி.முரளீதரன் (ரூ. 27 லட்சத்துக்கு மேல்) என குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து