முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மழைக்கால கூட்டத் தொடர் ஆரம்பமாகிறது: பாராளுமன்றம் நாளை கூடுகிறது மேகதாது, நீட் தேர்வு பிரச்சினைகளை எழுப்பி புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

சனிக்கிழமை, 17 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி: பாராளுமன்ற மழைக்கால கூட்டம் நாளை தொடங்குகிறது. முன்னதாக கட்சித் தலைவர்களுடன் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆலோசனை நடத்தினார். 

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடர் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், இரு பிரிவுகளாக நடத்த முடிவு செய்யப்பட்டும், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மார்ச் 8-ம்தேதியோடு கூட்டத்தொடர் முடித்துக் கொள்ளப்பட்டது. 

இந்த நிலையில் பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை 19-ம் தேதி தொடங்குகிறது, 20 அமர்வுகள் வரை நடத்தப்படும் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.  கொரோனா வைரஸ் 2-வது அலையின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் கூட்டத்தொடர் நடத்தப்படுகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்துவதும் வேகப்படுத்தப்பட்டுள்ளது.  இதுவரை மக்களவை எம்.பி.க்கள் 444 பேர், மாநிலங்களவை எம்.பி.க்கள் 218 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு இன்னும் செலுத்தப்பட வில்லை. இந்த முறை மழைக்காலக்கூட்டத்தொடரிலும் எம்.பி.க்கள் சமூக விலகலைக் கடைபிடித்தல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாகக் கடைபிடிக்கப்படும் எனத் தெரிகிறது.

முன்னதாக பாராளுமன்ற மழைக் கால கூட்டத் தொடரானது நாளை 19-ம் தொடங்கி ஆகஸ்ட் 13-ம் தேதி வரை மொத்தம் 19 நாட்கள் நடைபெறும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்து இருந்தார். பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் போது அன்றாடம் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை இரு அவைகளும் செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 40 மசோதாக்கள், 5 அவசர சட்டங்கள் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

இந்த கூட்டத் தொடரில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வு, கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை மற்றும் மேகதாது அணை விவகாரம், நீ்ட் தேர்வு  உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.  

பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்னதாக நேற்று தனது இல்லத்தில் அனைத்து பாராளுமன்ற கட்சி தலைவர்களின் கூட்டத்திற்கு, துணை ஜனாதிபதியும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்து ஆலோசனை மேற்கொண்டார்.  

இந்த நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர்கள் கூட்டம்  காணொலி வாயிலாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் பாராளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி கலந்து கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து