முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆக்ராவில் 17 கிலோ தங்கம், 5 லட்சம் கொள்ளை: துப்பாக்கி சண்டையில் 2 கொள்ளையர்கள் பலி

ஞாயிற்றுக்கிழமை, 18 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

ஆக்ரா: உத்தரப்பிரதேசம் ஆக்ராவின் நிதி நிறுவனத்தில் 17 கிலோ தங்கம், ரூ.5 லட்சம் நேற்று கொள்ளையடிக்கப்பட்டது. இதன் அடுத்த இரண்டு மணி நேரத்தில் வளைக்கப்பட்ட கும்பலுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 2 கொள்ளையர்கள் பலியாகினர்.

உலக அதிசயமான தாஜ்மகால் அமைந்த நகரம் ஆக்ரா. இதன் ஒரு பகுதியான கமலா நகரின் வணிக வளாகத்தின் முதல் மாடியில் உள்ளது மனப்புரம் நிதி நிறுவனம்.

இதில் சம்பவத்தன்று மதியம் 2..15 மணிக்கு திடீர் என 6 கொள்ளையர்கள் ஆயுதங்களுடன் புகுந்தனர். துப்பாக்கி முனையில் அந்நிறுவனத்தின் அலுவலர்களை மடக்கிய கொள்ளையர்கள், லாக்கரில் இருந்த 17 கிலோ தங்கம், ரூ.5 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்தனர்.

வெறும் 20 நிமிடங்களில் முடிந்த கொள்ளைக்கு பின் வெளிப்புறம் பூட்டிவிட்டு அனைவரும் தப்பிச் சென்றனர். பிறகு அக்கம், பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் வெளியே வந்த நிறுவனத்தினர் போலீஸுக்கு தகவல் அளித்தனர்.

இதற்கு ஆக்ராவின் ஐ.ஜி.யான நவீன் அரோரா, எஸ்.எஸ்.பி.யான தமிழர் ஜி.முனிராஜ் மற்றும் நகர எஸ்.பி ரோஹன் போத்ரே தம் படைகளுடன் வந்து விசாரணை நடத்தினர். ஜி.பி.எஸ் மூலமாக கொள்ளையர்கள் சென்ற தடத்தை போலீஸார் கண்டுபிடித்தனர்.

இதை தொடர்ந்து கொள்ளையர்களின் இருவரை அடுத்த இரண்டு மணி நேரத்தில் போலீஸாரின் தனிப்படை சுற்றி வளைத்தனர். ஆக்ராவின் மருந்து கடை ஒன்றில் ஒளிந்து கொண்ட கொள்ளையர்களுடன் துப்பாக்கிச் சண்டை நடந்தது.

சுமார் 25 ரவுண்டு குண்டுகள் பொழிந்த சண்டையில் அதிர்ஷ்டவசமாக போலீஸார் உயிர் தப்பினர். கொள்ளையர்களில் இருவர் குண்டுகளால் படுகாயம் அடைந்தனர்.

இந்த இருவரில் ஒருவர் மணிஷ் பாண்டே, மற்றொருவர் நிர்தோஷ் குமார் என அடையாளம் காணப்பட்டது. இந்த இருவரும் ஆக்ராவின் எஸ்.என்.அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இருவரும் உயிரிழந்தனர். தப்பியோடிய மற்ற கொள்ளையர்களை தமிழர் ஜி.முனிராஜ் தலைமையில் படை அமைக்கப்பட்டு தேடப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து