முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 லட்சம் ரூபாய் நோட்டுக்களை கடித்து குதறிய எலிகள் காய்கறி வியாபாரி கண்ணீர்

ஞாயிற்றுக்கிழமை, 18 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

ஹைதராபாத்: காய்கறி வியாபாரி ஒருவர் அறுவை சிகிச்சைக்காக சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுக்களை எலிகள் கடித்து குதறியதால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்ல இயலாத பரிதாபத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

திரைப்படங்களில் எலிகள் செய்யும் சேட்டையால் அவதிப்படும் காட்சியை பார்த்தால் சிரிப்பு வரும் ஆனால் நிஜத்தில் எலிகள் அட்டகாசத்தால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார் காய்கறி வியாபாரி ஒருவர்.

தெலுங்கானா மாநிலம் மகபூப்பாபாத் மாவட்டம், இந்திரா நகரைச் சேர்ந்த 62 வயதான காய்கறி வியாபாரியான ரெட்டியா என்பவர் இருசக்கர வாகனத்தில் காய்கறி வியாபாரம் செய்து பிழைத்து வருகிறார்.

நான்கு வருடங்களுக்கு முன்னர் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. வயிற்றில் கட்டி இருப்பதாக கூறியதோடு, அறுவை சிகிச்சைக்காக நான்கு லட்ச ரூபாய் செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அறுவை சிகிச்சைக்காக, இருசக்கர வாகனத்தில் காய்கறிகளை விற்று சிறுகச் சிறுக இரண்டு லட்ச ரூபாயை தனது வீட்டில் சேமித்து வைத்துள்ளார் ரெட்டியார். சிகிச்சைக்கு தேவையான மேலும் இரண்டு லட்ச ரூபாய்க்காக தனது வீட்டினை அடகு வைத்து கடன் வாங்கி வந்துள்ளார்.

இந்நிலையில், வீட்டில் தான் சேமித்து வைத்திருந்த இரண்டு லட்ச ரூபாயை எடுத்து பார்த்த போது அந்த முதியவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

500 ரூபாய் நோட்டுக்களை எலிகள் கடித்து குதறி வைத்து இருந்தன. 4 வருடங்களாக தான் மிச்சப்படுத்தி சிகிச்சைக்காக சேர்த்து வைத்த 2 லட்சம் ரூபாயும் கந்தல் கந்தலாக இருந்ததால் கடுமையான மன உளைச்சலுக்குள்ளானார் அந்த வியாபாரி. 

சிலரது அறிவுறுத்தலின் பேரில் 500 ரூபாய் நோட்டுகளை அருகிலிருக்கும் வங்கிகளில் மாற்ற முயற்சித்துள்ளார் ரெட்டியார் அங்கே கந்தலான ரூபாய் நோட்டுக்களை வாங்க வங்கி ஊழியர்கள் மறுத்துவிட்டனர்.

இதனால், என்ன செய்வது என தெரியாமல் விழித்த பெரியவரிடம், அங்கிருக்கும் சிலர் ஹைதராபாத்தில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு சென்றால், கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றலாம் என கூறியுள்ளனர். ஹைதராபாத்தில் உள்ள ரிசர்வ் வங்கியில் கிழிந்த நோட்டுக்களை மாற்றுவார்களா? இல்லையா? என புரியாமல் நிற்கிறார் ரெட்டியார்.

சிறுக சிறுக பணம் சேர்த்த வியாபாரி, தனது வீட்டில் எலிகள் புகாதவாறு பாதுகாப்பான இரும்பு பெட்டியிலோ அல்லது அருகில் உள்ள வங்கி மற்றும் தபால் நிலையத்திலோ தனது பணத்தை சேமித்திருந்தால் எலிகளால் இது போன்ற விபரீதம் நிகழ்ந்திருக்காது என்று அப்பகுதி வாசிகள் வேதனையோடு தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து