முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடர் கனமழை தீவிரம்: மும்பையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக உயர்வு: பிரதமர் மோடி, முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 18 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

மும்பை: மும்பையில் பெய்து வரும் கனமழையை தொடர்ந்து அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி, மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே நிவாரண தொகை அறிவித்துள்ளனர். மேலும் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். 

தென்மேற்கு பருவமழை வடமாநிலங்களில் தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. டெல்லி, மும்பையில் கடந்த 2 நாட்களாக தீவிரமாக மழை பெய்து வருகிறது. மும்பையில் கடந்த 24 மணி நேரமாக அதி தீவிர கனமழை பெய்து வருகிறது. அங்கு நேற்று முன்தினம் காலையில் இருந்து மாலை வரை மட்டும் மும்பையில் பல்வேறு இடங்களில் 120 மிமீ மழை பெய்துள்ளது. அதன்பின் இரவு நேரத்திலும் விடாமல் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலையில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளித்தது. மும்பையின் தாழ்வான தெற்கு பகுதிகளில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியது. பல இடங்களில் தண்ணீரில் மிதந்தப்படி வாகனங்கள் செல்கின்றன. 

இந்நிலையில் அங்கு மேலும் இரண்டு நாட்களுக்கு அதிதீவிர கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் ரயில் நிலையங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த சூழலில் கனமழை காரணமாக மும்பையில் செம்பூர் மற்றும் விக்ரோலி ஆகிய இடங்களில் வீட்டின் சுற்று சுவர் சரிந்து விழுந்ததில் 15 பேர் பலியானதாக முதலில் தகவல் வெளியாகி இருந்தது. புறநகரான விக்ரோலி பகுதியில் நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் குடியிருப்பு பகுதியின் சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர், இருவர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கனமழை காரணமாக செம்பூர் மற்றும் விக்ரோலியில் ஏற்பட்ட விபத்துக்களில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, இறந்தவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் அரசு வழங்குவதாகவும், காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இந்த நிலையில் மும்பையில் கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 25 அக உயர்ந்துள்ளது.

இந்நிலையில்,சுவர் இடிந்து விழுந்ததால் உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிதி உதவி தேசிய நிவாரணத்திலிருந்து வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.  இதற்கிடையே மும்பையில் சியான், செம்பூர், காந்தி மார்க்கெட், அந்தேரி மார்க்கெட், ஆர்.சி.எப். காலனி, எல்.பி.எஸ். சாலை, வாட்லா பாலம் ஆகியவற்றில் மழை நீர் சூழ்ந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பேருந்து போக்குவரத்து முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மும்பையில் கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், மும்பையின் செம்பூர் மற்றும் விக்ரோலி பகுதிகளில் பலத்த மழையைத் தொடர்ந்து நிகழ்ந்த சம்பவங்களில் பல உயிரிழப்புகள் ஏற்பட்ட செய்திகளால் ஆழ்ந்த வருத்தமடைந்தேன். இந்த சம்பவத்தில் துயரமடைந்த குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்,  அங்கு அனைவருக்கும் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் கிடைக்க விரும்புகிறேன் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து