முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெகாசஸ் உளவு விவகாரம்: நாளை நாடு முழுவதும் போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு

செவ்வாய்க்கிழமை, 20 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி: பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் நாளை போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. 

இஸ்ரேல் நாட்டில் ‘என்.எஸ்.ஓ.’ என்ற தொழில்நுட்ப நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனம் உருவாக்கிய ‘பெகாசஸ்’ என்ற உளவு மென்பொருள், மூலம் 50 நாடுகளை சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட தனி நபர்களின் செல்போன் எண்கள் உளவுபார்க்கபட்டதாக கூறப்படுகிறது. அந்த பட்டியலில், 189 பத்திரிகையாளர்கள், 600-க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள், 65 தொழிலதிபர்கள், 85 மனித உரிமை இயக்கவாதிகள், பல்வேறு நாட்டு தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

இந்தியாவை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோரின் செல்போன் எண்களும் உள்ளன. அவர்களில் 2 அமைச்சர்கள், 3 எதிர்க்கட்சி தலைவர்கள், ஒரு நீதிபதி, 40-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரும் அடங்குவர்.  அவர்களது செல்போன்களில் உளவு மென்பொருளை ஊடுருவி உளவு பார்த்து விட்டார்களா? அல்லது உளவு பார்க்க முயற்சி நடந்ததா? என்று தெரியவில்லை. அதை உறுதிப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போன் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படுவதை மத்திய அரசு மறுத்து வருகிறது.  இந்த விவகாரம் தொடர்பாக 2 நாட்களாக எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தை முடக்கி வருகின்றன.  காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், தி.மு.க. ஆகிய கட்சிகளின் எம்.பிக்கள் கூடி ஆலோசனை நடத்தினர். அவர்கள் பெகாசஸ் பிரச்சினையை இரு அவைகளிலும் எழுப்பி வருகின்றன. 

இந்த நிலையில் காங்கிரஸ் பெகாசஸ் உளவு விவகாரம்  தொடர்பாக நாடுமுழுவதும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.  இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாகவும், எந்தெந்த தலைவர்களைக் குறிவைத்து ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளது தொடர்பாகவும் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று  ஒவ்வொரு மாநிலத்திலும் பத்திரிகையாளர் சந்திப்பு கூட்டம் நடத்தப்படும். பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரத்தை  சுப்ரீம் கோர்ட்  மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி நாளை 22-ம் தேதி அனைத்து மாநிலத்தின் கவர்னர் மாளிகை முன்பும், காங்கிரஸ் கட்சி சார்பில் அடையாளப் போராட்டம் நடத்தப்படும்.  பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் சமீபத்திய தகவலின்படி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் செல்போன், அவரின் அலுவலக ஊழியர்கள் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடந்த போது, இந்த பெகாசஸ் ஸ்பைவேர் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. எனவே, உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலகக் கோரி நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து