முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 தவணை தடுப்பூசி அதிகம் செலுத்தப்பட்ட 5 முக்கிய நகரங்களில் சென்னை முதலிடம்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

புதன்கிழமை, 21 ஜூலை 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : இரண்டு தவணை தடுப்பூசிகளும் அதிக அளவில் செலுத்தப்பட்ட 5 முக்கிய நகரங்களில் சென்னை முதலிடத்தில் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.

இந்தியாவில், கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி தடுப்பூசி போடப்படுகிறது. இதில், ஸ்புட்னிக் வி தடுப்பூசி, ஒருசில தனியார் மையங்களில் மட்டுமே போடப்படுகிறது. மேலும் தமிழகத்தில் இது வரை 1 கோடியே 83 லட்சத்து 56 ஆயிரத்து 631 பேருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தினசரி, 1.50 லட்சம் முதல் மூன்று லட்சம் பேர் வரை தடுப்பூசி போடப்படுகிறது. ஆனால், மத்திய தொகுப்பில் இருந்து, தமிழகத்திற்கு கிடைக்கும் தடுப்பூசிகள் போதுமானதாக இல்லை.

இதனால், அடிக்கடி தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, 5,000-க்கும் மேற்பட்ட தடுப்பூசி மையங்கள் இருந்த நிலையில், தட்டுப்பாடு காரணமாக, 3,000-க்கு கீழ் குறைக்கப்பட்டுள்ளது. அதைப்போன்று சென்னையில் 400-க்கு மேல் இருந்த தடுப்பூசி மையங்கள், 64 ஆக குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதலில் கொரோனா தடுப்பூசி மீது பொதுமக்களுக்கு தயக்கம் இருந்தாலும், தற்போது, பெரும்பாலானோர் தாங்களாகவே முன்வந்து தடுப்பூசி போட்டு கொள்கின்றனர்.

தினசரி 1.50 லட்சம் பேர் வரை தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், முதல் டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டவர்களில், பெரும்பாலானோர், இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட தயக்கம் காட்டி வருகின்றனர்.

முதல் டோஸ் போட்ட பெரும்பாலானோருக்கு, காய்ச்சல், தலைவலி போன்ற உடல் உபாதைகளும், சிலருக்கு கொரோனா தொற்றும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட அவர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதற்கிடையே, காலக்கெடு முடிந்து, இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடாதவர்களுக்கு, சென்னை மாநகராட்சியில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை, மும்பை, பெங்களூர், டெல்லி, ஐதராபாத் ஆகிய 5 நகரங்களில் அதிக அளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நகரம் தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் சென்னையில் இரண்டு தவணை தடுப்பூசிகளும் அதிக அளவில் செலுத்தப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதன்படி 2-ம் தவணை தடுப்பூசி சென்னையில் 11 சதவீதம், பெங்களூர் 10 சதவீதம், டெல்லி, மும்பை ஆகிய நகரங்களில் 7 சதவீதம் மற்றும் ஐதராபாத்தில் 5 சதவீதம் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 18 வயது முதல் 44 வயது வரையிலானவர்களுக்கு பெங்களூரில் 64 சதவீதம், சென்னை 43 சதவீதம், ஐதராபாத் 37 சதவீதம், மும்பை 33 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் மொத்த மக்கள் தொகையில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் பெங்களூரில் 91 சதவீதம், சென்னையில் 85 சதவீதம், மும்பை 70 சதவீதம், டெல்லி 59 சதவீதம், ஐதராபாத் 48 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர் என்று மாநகராட்சி அதிகாரிகள்  தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து