முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகை

புதன்கிழமை, 21 ஜூலை 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று பக்ரீத் பண்டிகையை இஸ்லாமிய பெருமக்கள் உற்சாகமாக கொண்டாடினர். புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையை நடத்தினர். 

உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் ஆண்டு தோறும் இரண்டு பெருநாளை கொண்டாடுவார்கள். ஒன்று ரம்ஜான் பண்டிகை. மற்றொன்று பக்ரீத் பண்டிகை ஆகும்.  புனித ரமலான் மாதத்தில் 30 நாட்கள் நோன்பு இருந்து அதன் இறுதியில் கொண்டாடப்படுவது ரம்ஜான் பண்டிகையாகும். கொரோனா ஊரடங்கு என்பதால் கடந்த மே மாதம் வீடுகளில் தொழுகை நடத்தி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. 

இந்த நிலையில் நேற்று நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. இறைத்தூதர் இப்ராஹீம் நபியின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டது. இப்ராஹீம் நபி, தான் கண்ட கனவின்படி தனது மகன் இஸ்மாயிலை அறுத்து பலியிட துணிந்தார். அப்போது வந்த இறைக்கட்டளை மகனை அறுக்க வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக ஒரு ஆட்டை இறைவனுக்காக பலியிடுமாறும் கூறப்பட்டது. அதன்படியே அவர் அக்கடமையை நிறைவேற்றினார். இறைக்கட்டளை என்றதும் தனது மகனையே பலிகொடுக்க முயன்ற இந்தத் தியாகம் தான் இந்த பண்டிகையின் பின்னணியாகும்.

இந்த தியாகத்திருநாளில் சிறப்பு தொழுகை நடத்தியும், கால்நடைகளான ஆடு, மாடு, ஒட்டகங்களை பலியிட்டு அதன் இறைச்சிகளை உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும் கொடுத்தும் கொண்டாடப்படும்.  ஈதுல் அல்ஹா எனும் இந்த தியாகத்திருநாள் ஹஜ் பெருநாள் என்றும் அழைக்கப்படுகிறது. முஸ்லிம்களின் கடைசி மாதமான துல்ஹஜ் மாதம் 10-வது நாளில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.  

தமிழ்நாடு முழுவதும் நேற்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. புத்தாடை அணிந்து, மசூதிகளுக்கு சென்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு பக்ரீத் பண்டிகையை கொண்டாடினார்கள்.  காலை 7 மணியில் இருந்து சிறப்பு தொழுகை தொடங்கியது. தொழுகை முடிந்த பிறகு பிரார்த்தனை செய்தனர். உறவினர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். தொழுகைக்கு பிறகு குர்பானி கொடுக்கப்பட்டது. ஆடு தனி நபராகவும், மாடு கூட்டு குர்பானி ஆகவும் கொடுக்கப்பட்டது.  குர்பானி கொடுக்கப்பட்ட ஆட்டின் இறைச்சியின் ஒரு பங்கை தாங்கள் வைத்துக் கொண்டனர். மற்ற இரண்டு பங்குகளை உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும் பிரித்துக் கொடுத்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து