Idhayam Matrimony

தொற்று பாதிப்பு குறைந்த இடங்களில் பள்ளிகளை படிப்படியாக திறக்கலாம்: எய்ம்ஸ் இயக்குனர் கருத்து

புதன்கிழமை, 21 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி: கொரோனா பாதிப்பு குறைந்து வரும் மாவட்டங்களில் பள்ளிகளை படிப்படியாக திறக்கலாம் என டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் பிறகு கொரோனா முதல் அலை, இரண்டாம் அலை என தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டதால், பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான சூழல் ஏற்படவில்லை.

இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் மாணவர்களின் இறுதி ஆண்டுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் ஊரடங்கு காலத்தில் மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருப்பதற்காக, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்ப்பார்ப்பு பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே நிலவி வருகிறது.

ஏற்கனவே கொரோனா தொற்றின் இரண்டு அலைகளை எதிர்கொண்ட நிலையில், 3-வது அலையும் வரும் என்று நிபுணர்கள் கணித்திருப்பதால் பள்ளிகளைத் திறக்க மத்திய, மாநில அரசுகள் தயக்கம் காட்டி வருகின்றன. 

இந்நிலையில் பள்ளிகளை படிப்படியாக திறக்கலாம் என்றும் அதற்கான நேரம் வந்து விட்டது என்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், 

கொரோனா பரவல் விகிதம் 5 சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ள மாவட்டங்களில் பள்ளிகளைத் திறக்கலாம் என்றும் இதுகுறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் அவர்களின் விருப்பத்தை ஆராய்ந்து பள்ளிகள் முடிவெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியாவில் பல குழந்தைகள் கொரோனா தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ளதாக குறிப்பிட்ட அவர், சில குழந்தைகளுக்கு தொற்று ஏற்படவும் வாய்ப்புள்ளது என்பதால் பள்ளிகளில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஒருவேளை கொரோனா பரவல் அதிகரித்தால் பள்ளிகளை உடனடியாக மூடி விடவும் தயாராக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது வகுப்புகள் பெரும்பாலும் ஆன்லைனில் நடத்தப்படும் சூழ்நிலையில் ஏழை மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள் பலருக்கும் இணைய வசதி கிடைக்காத சூழல் உள்ளது. எனவே இது கல்வியில் பாகுபாட்டை ஏற்படுத்துகிறது என்றும் கற்றலில் உள்ள இடைவெளியை குறைக்க வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது என்றும் ரன்தீப் குலேரியா தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து