முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் திருவாரூர் உட்பட 12 மத்திய பல்கலை கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம்

வெள்ளிக்கிழமை, 23 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி: தமிழகம் உட்பட 12 மத்திய பல்கலைக் கழகங்களில் மத்தியக் கல்வி அமைச்சகம் துணைவேந்தர்களை நியமித்ததற்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதுகுறித்து மத்தியக் கல்வி அமைச்சக வட்டாரம் கூறும்போது, தற்போது 12 மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர்களை மத்தியக் கல்வி அமைச்சகம் நியமித்ததற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இதில் அரியானா மத்தியப் பல்கலைக்கழகம், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு, ஜார்க்கண்ட், கர்நாடகா, தமிழ்நாட்டில் திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகம், ஐதராபாத் மத்தியப் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல கயாவில் உள்ள தெற்கு பீகார் மத்தியப் பல்கலைக்கழகம் , மணிப்பூர் பல்கலைக்கழகம், மவுலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகம் (MANUU), வடகிழக்கு மலை பல்கலைக்கழகம் (NEHU), பிலாஸ்பூர் மத்தியப் பல்கலைக்கழகம் மற்றும் குரு காசிதாஸ் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் புதிய துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மாநிலங்களவையில் கூறும்போது, மத்தியப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவிகளுக்கான 22 இடங்கள் காலியாக உள்ளன. இதில் 12 இடங்களுக்கான நியமனங்கள் ஜனாதிபதியால் இறுதி செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தராக முத்துகலிங்கன் கிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பணியாற்றி வரும் முத்துகலிங்கன் கிருஷ்ணனை திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமனம் செய்து மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு இவர் அந்த பதவியில் இருப்பார். கடந்த  2019 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 17-வது துணை வேந்தராக முத்துகலிங்கன் கிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டார். 2 நாடுகளில் ஆராய்ச்சி மேற்படிப்பை மேற்கொண்டவரான இவர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் புதிய பாடத்திட்டம் உள்ளிட்ட கல்வி தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து