மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். சந்திப்பு

EPS-OPS 2021 07 23 1

மத்திய அமைச்சர் அமித்ஷாவை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்களான ஓ. பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று சந்தித்து பேசினர். 

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கடந்த ஞாயிறன்று டெல்லி சென்றனர். நேற்று முன்தினம் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்து பேசினார்கள். அப்போது தமிழகம் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.  இத்துடன் கட்சி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாகவும் பிரதமரிடம் பேசியதாக தெரிகிறது. மேலும் அ.தி.மு.க. மீது தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து புகார் தெரிவித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. பிரதமருடனான சந்திப்புக்கு பிறகு இரு தலைவர்களும் டெல்லியிலேயே முகாமிட்டு இருந்தனர். 

இந்த நிலையில் நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பாராளுமன்ற வளாகத்தில் அவர்கள் சந்தித்து பேசினார்கள். அப்போது அவரிடம் சில கோரிக்கைகளை முன் வைத்து விட்டு பிரதமரிடம் பேசிய விவகாரங்களை அமித்ஷாவிடமும் தெரிவித்ததாகவும் தெரிகிறது. தமிழகத்தில் 10 மாவட்டங்களில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் கூட்டணியை தொடர்வது பற்றியும் அவர்கள் பேசியதாக கூறப்படுகிறது. பிரதமர் மற்றும் அமித்ஷாவுடனான சந்திப்பில் எம்.பி.க்கள் தம்பிதுரை, ரவீந்திரநாத் குமார், எம்.எல்.ஏ.க்கள் வேலுமணி, மனோஜ்பாண்டியன், தளவாய்சுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து