முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலை கிராமங்களில் நடைபயணமாக சென்று குறைகளை கேட்ட அமைச்சர்

செவ்வாய்க்கிழமை, 27 ஜூலை 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மலை கிராமங்களில் 15 கி.மீ நடைபயணமாக சென்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியன் பல்வேறு நலத்திட்ட பணிகளை துவக்கி வைத்து, மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு காமகிரி என்ற கிராமத்தில் ஆய்வு செய்த போது அங்கு உள்ள மக்கள் சிகிச்சைக்காக சுமார், 15 கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டி உள்ளதால் தங்கள் கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் வசதி வேண்டும் என கோரிக்கை வைத்தனர். 10 நாட்களில் ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுக்கப்படும் என அமைச்சர் வாக்குறுதி அளித்தார்.

பெட்டமுகிலாலம் அடுத்த கோட்டையூர் கொல்லை அரசு பள்ளியில் அதிகாரிகளுடன் தங்கிய அமைச்சர் நேற்று காலை நடை பயணமாக மூக்கனாங்கரை என்ற மலை கிராமத்தில் ஆய்வு செய்தார். இளைஞர் ஒருவர் எருது விடும் விழாவில் தனது இரண்டு கால்களை இழந்து விட்டதாகவும், தனக்கு வாழ்வாதாரம் கொடுக்கும்படியும் கோரிக்கை விடுத்த நிலையில் அவருக்கு செயற்கை கால் கிடைக்க செய்ய வேண்டிய ஏற்பாடுகளை அமைச்சர் உடனடியாக செய்து கொடுத்தார். மொத்தம் 15 கி.மீ., தூரம் நடைபயணம் மேற்கொண்ட அமைச்சர், கடமன் குட்டை வன கிராமம் வழியாக, தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளியை சென்றடைந்தார்.

வனப்பகுதி வழியாக அமைச்சர் நடைபயணம் சென்றதால், துப்பாக்கியுடன் வனத்துறையினர் பாதுகாப்பு அளித்தனர். மக்களை தேடி மருத்துவம் என்ற சிறப்புத் திட்டம் முதல்வர் ஸ்டாலினால் துவக்கி வைக்கப்பட உள்ள நிலையில் அதற்கு முன்னோட்டமாக தமிழகத்தில் பல்வேறு கிராமங்களுக்கும் நேரடியாக சென்று பொதுமக்களின் குறைகளை சுகாதாரத்துறை அமைச்சர் நேரடியாக கேட்டறிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து