துருக்கியில் நகருக்குள் பரவிய காட்டுத்தீ: குடியிருப்புகளில் இருந்து மக்கள் வெளியேற்றம்

Turkey-Wildfires 2021 07 29

துருக்கியில் காட்டுத்தீ நகருக்குள் பரவியதையடுத்து, குடியிருப்புகளில் இருந்து மக்கள் வேகமாக வெளியேறி வருகின்றனர்.

துருக்கி நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மனவ்கட் நகரைச் சுற்றி இருக்கும் காடுகளில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த காட்டுத்தீ காரணமாக கிளம்பிய புகைமண்டலம் மனவ்கட் நகரைச் சூழ்ந்ததால், சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து வேகமாக வீசிய காற்றின் காரணமாக காட்டுத்தீயானது, நகர் பகுதிகளுக்குள் பரவத் தொடங்கியது. இதனால் அங்கு பல்வேறு கட்டிடங்கள் தீயில் கருகி சேதமடைந்துள்ளன. இருப்பினும் பொதுமக்களுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், பலர் தங்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிட்டனர். இதனால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.

இருப்பினும் காட்டுத்தீயால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேதங்கள் குறித்த விவரங்கள் இதுவரை கிடைக்கவில்லை என்றும் தீயை அணைக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றும் அந்நகரின் மேயர் சுக்ரு சோசன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அந்நாட்டு அதிபர் டயிப் எர்டோகன், எவ்வித உயிர் சேதமுமின்றி காட்டுத் தீ கட்டுப்படுத்தப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார். 

காட்டுத்தீயை அணைக்கும் பணியில் 19 ஹெலிகாப்டர்கள் மற்றும் 108 வாகனங்களில் கிட்டத்தட்ட 400 வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காட்டுத் தீக்கான காரணம் தற்போது வரை கண்டறியப்படாத நிலையில், அதற்கான விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து