முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் 4 மடங்கு காற்று மாசு உயர்வு; ஆய்வில் அதிர்ச்சி தகவல்

வியாழக்கிழமை, 29 ஜூலை 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை: சென்னையில் காற்று மாசு அனுமதிக்கப்பட்ட அளவை விட 4 மடங்கு உயர்ந்து மக்களின் இயல்பு வாழ்வில் மறைமுக கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக தலைநகரான சென்னை இந்திய அளவில் 4 முக்கிய மெட்ரோபாலிடன் நகரங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.  குறைந்த பரப்பளவு, அதிக மக்கள் நெருக்கடி நிறைந்த நகராக உள்ள சென்னையில் வாகன போக்குவரத்து, தொழிற்சாலைகள் ஆகியவற்றால் காற்று மாசு தரம் கேள்வி குறியாகவே திகழ்கிறது.

இதனால் மக்களின் வாழ்க்கை தரம் ஊசலாட்டம் காணுகிறது.  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட முதல் அலை, அதன் தீவிரம் மற்றும் 2-வது அலையில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளே அதிக இலக்காகின.

சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களே அதிகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கைளை கொண்டிருந்தன.  இந்த நிலையில், ஆரோக்கிய திறனுக்கான முன்முயற்சி என்ற அமைப்பு சென்னையில் திரிசூலம், பாரிமுனை, காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர் அனல் மின்நிலையம் அருகில் உள்ள செப்பாக்கம், வேளச்சேரி, தி.நகர் உள்ளிட்ட 20 இடங்களை ஆய்வுக்கு உட்படுத்தியது.

இதன்படி, கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் 24 மணி நேர தொடர் காற்று தர பரிசோதனையை நடத்தியது.

ஒரு கனமீட்டர் காற்றில் 2.5 மைக்ரான் அளவு கொண்ட காற்றில் மிதக்கும் நுண் துகள்களின் அளவு (PM 2.5) 60 மைக்ரோ கிராம் வரை இருப்பது அனுமதிக்கப்பட்ட அளவாகும். ஆனால் இந்த ஆய்வில் அனுமதிக்கப்பட்ட மாசு அளவை விட 4 மடங்கு அதிகமாக மாசு பதிவாகி இருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இவற்றில் அதிக அளவாக, திரிசூலம், பாரிமுனை, வியாசர்பாடி ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட ஆய்வில் 176 மைக்ரோ கிராம் முதல் 228 மைக்ரோ கிராம் வரை காற்று மாசு இருந்தது.

இதேபோன்று, திருவொற்றியூர், காசிமேடு (துறைமுகம் அருகே), துரைப்பாக்கம் (குப்பை கொட்டும் வளாகம் அருகில்), குருவிமேடு (அனல்மின் நிலைய நிலக்கரி சாம்பல் குளம் அருகே), சோழிங்கநல்லூர் (பழைய மகாபலிபுரம் நெடுஞ்சாலை அருகில்), வேளச்சேரி, நொச்சிக்குப்பம், கொடுங்கையூர் (குப்பை கொட்டும் வளாகம்அருகில்), மீஞ்சூர், உர்ணாம்பேடு, செப்பாக்கம் (நிலக்கரி சாம்பல் குளம் அருகே) திருப்பெரும்புதூர், தியாகரயநகர், அத்திப்பேடு, காட்டுக்குப்பம், அம்பத்தூர் ஆகியஇடங்களில் பிஎம் 2.5 மாசு 59 முதல் 128 மைக்ரோகிராமாக இருந்தது ஆய்வில் தெரிய வந்துள்ளது.  காட்டுப்பள்ளி குப்பத்தில் 53 மைக்ரோ கிராமாக இது இருந்தது.

இந்த ஆய்வு முடிவுகளை பார்க்கும்போது, இது அமெரிக்க காற்று தர நிர்ணய விதிகளின்படி ஆரோக்கியமற்ற நிலையாகும். இப்பகுதியில் வாழும், இதய அல்லது நுரையீரல் பிரச்சினை உள்ளவர்கள், வயதானவர்கள், சிறார்கள் உடல் ரீதியான செயல்பாடுகளை அதிகம் மேற்கொள்ள கூடாது என அந்த விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து