காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக புத்தகத்தை வெளியிட்டார் துரைமுருகன்

Duraimurugan--2021 07 29

கர்நாடக மாநிலம் குடகு மலையில் தோன்றித் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பாய்ந்து வங்கக் கடலில் கலக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க காவேரி பண்டைக்காலம் முதல் தமிழகத்தின் வாழ்வாதாரமாக விளங்குகிறது.  காவேரி நதி நீரைப் பகிர்ந்து கொள்வதில் கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களுக்கிடையே பல ஆண்டுகளாகப் பிரச்சினைகள் இருந்து வருகின்றன.

இதற்காகக் காவேரி நடுவர்மன்றம், காவேரி நதிநீர் ஆணையம், காவேரி நீர் ஒழுங்காற்றுக்குழு போன்ற அமைப்புகள் உச்சநீதிமன்றத்தால் ஏற்படுத்தப்பட்டுப் பல காலகட்டங்களில் பல தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இப்பிரச்சினை தொடர்பாக 1970 முதல் 2018 வரை தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகள், உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகள் மற்றும் அதன் விவரங்கள், உச்ச நீதிமன்றம் இப்பிரச்சனைகளைக் கையாண்ட விதம், வழங்கப்பட்ட தீர்ப்புகள் ஆகியவற்றைத் தொகுத்து வரிசைப்படுத்தி காவேரி நதிநீர் பிரச்சனை - உச்சநீதிமன்றம் கையாண்ட விதம் - ஓர் தொகுப்பு  என்ற தலைப்பில் தமிழ்நாடு காவேரி தொழில்நுட்பக்குழுத் தலைவர் பொறியாளர் ஆர்.சுப்ரமணியன் வழங்கியுள்ளார்.

திருச்சியில் உள்ள நீர் மேலாண்மை பயிற்சி நிறுவனம் இப்புத்தகத்தைத் தயாரிக்க, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் நேற்று இப்புத்தகத்தை வெளியிட்டார். முதல் பிரதியைப் பொதுப்பணித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் சந்தீப்சக்சேனா பெற்றுக்கொண்டார்.

இப்புத்தகம் எந்தந்தக் காலக்கட்டத்தில் எவ்வகையான வழக்குகள் தொடுக்கப்பட்டன அதன் விவரங்கள் ஆகியவற்றைத் தெளிவாக வரிசைப்படுத்தியுள்ளது. இப்புத்தகம் அரசு அலுவலர்கள், பொறியாளர்கள் மற்றும் அடுத்த சந்ததியினர் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்நிகழ்ச்சியில் காவேரி தொழில்நுட்பக்குழுத் தலைவர் பொறியாளர் ஆர்.சுப்ரமணியன், நீர்வளத்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் கே.இராமமூர்த்தி, திருச்சி நீர்மேலாண்மைப் பயிற்சி நிலையத்தின் தலைமைப் பொறியாளர்  எம்.ராஜ்மோகன், திருச்சி மண்டலத் தலைமைப் பொறியாளர் ச.ராமமூர்த்தி, சென்னை மண்டலத் தலைமைப் பொறியாளர் ஜி.முரளிதரன், கோவை மண்டலத் தலைமைப்  பொறியாளர் கே.அசோகன், மதுரை மண்டல தலைமை பொறியாளர் எம்.கிருஷ்ணன்,  பொதுப்பணித்துறைச் சிறப்புச் செயலாளர் ரவீந்தர பாபு மற்றும் தலைமைப் பொறியாளர்கள் ஏ.தனபால், சி.பொன்ராஜ், கண்காணிப்புப் பொறியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து