முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய விரைவில் புதிய சட்டம் அமைச்சர் ரகுபதி தகவல்

புதன்கிழமை, 4 ஆகஸ்ட் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை: தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய விரைவில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். 

இது குறித்து அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 

ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடைசெய்ய வேண்டும் என தி.மு.க. சார்பில் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது வலியுறுத்தியதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பர் 21-ம் தேதி ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்குத் தடை விதித்து அவசர கதியில் சட்டம் ஒன்றை அ.தி.மு.க. அரசு நிறைவேற்றியது.

 அ.தி.மு.க. அரசின் சட்டத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், தமிழ்நாடு அரசின் சார்பில் தலைமை வழக்கறிஞர் வாதிட்டு, உரிய கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்து வைத்த போதிலும், இந்த விளையாட்டுகள் ஏன் தடை செய்யப்படுகிறது என்பது குறித்து போதுமான காரணங்களை சட்டம் நிறைவேற்றும் போது கூறவில்லை. விளையாட்டை முறைப்படுத்தும் உரிய விதிகள் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஒட்டுமொத்தமாகத் தடை விதிக்க முடியாது என்று கூறி, தமிழக அரசின் ஆன்லைன் ரம்மி விளையாட்டினைத் தடை செய்யும் சட்டத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. ஆனாலும், உரிய விதிமுறைகளை உருவாக்கிப் புதிய சட்டம் கொண்டு வருவதற்குத் தடை ஏதுமில்லை என்று சென்னை ஐகோர்ட் இதே தீர்ப்பில் தெளிவுபடுத்தியிருக்கிறது.

பொதுநலன் மிக முக்கியம் என்பதால், உரிய விதிமுறைகள் மற்றும் தகுந்த காரணங்களைத் தெளிவாகக் குறிப்பிட்டு, எவ்விதத் தாமதமுமின்றி, ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளைத் தடைசெய்யும் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என முதல்வர் நேற்று முன்தினம் தீர்ப்பு வெளிவந்த உடனேயே உத்தரவிட்டிருக்கிறார்.

ஆகவே, முதல்வரின் ஆணைக்கிணங்க,  தமிழகத்தில்  ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளைத் தடைசெய்யும் சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.  இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து