மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்ட ஒருபோதும் விட மாட்டோம்- தமிழக பா.ஜ. தலைவர் பேச்சு

BJP-leader-Annamalai-2021 -

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட ஒரு போதும் விடமாட்டோம் என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறினார். 

தமிழக முதல்வர் பிரதமரை நேரில் சந்தித்து மேகதாது அணை பிரச்சினை குறித்துத் தமிழகத்தின் நிலைப்பாட்டை விளக்கினார். அதை தொடர்ந்து மேகதாது அணை அமைக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது எனக் கோரி, அப்போதைய கர்நாடக முதல்வர் எடியூரப்பா தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதினார். தமிழக முதல்வர் ஸ்டாலின், இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக முதல்வருக்கு பதில் கடிதம் எழுதினார். இந்நிலையில், மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என, கர்நாடகாவில் பதவியேற்றுள்ள புதிய முதல்வர் பசவராஜ் பொம்மையும் கூறிவருகிறார்.

இந்நிலையில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசைக் கண்டித்து, தமிழக பா.ஜ.க. சார்பில் தஞ்சாவூரில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.  அதன்படி, தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு பா.ஜ.க. சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. 

போராட்டத்தைத் தமிழக பா.ஜ.க. பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தொடங்கி வைத்தார். உண்ணாவிரத போராட்டத்திற்கு அண்ணாமலை தலைமை வகித்தார். இந்த போராட்டத்தில், தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியதாவது:-

மேகதாதுவில் அணை கட்டுவதை கர்நாடக அரசு நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தவே இந்தபோராட்டம். விவசாய சட்டம் வந்தால் சொந்த பொருளை விவசாயிகள் சிறப்பாக விற்கலாம்.  மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட ஒரு போதும் விடமாட்டோம். தமிழக பா.ஜ.க. என்றும் டெல்டா மாவட்ட விவசாயிகள் பக்கம் நிற்கும் என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து