முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் புதிய ஆதீனம் 23-ம் தேதி பதவியேற்கிறார்

வெள்ளிக்கிழமை, 20 ஆகஸ்ட் 2021      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

மதுரை : மதுரை புதிய ஆதீனமாக ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முறைப்படி வரும் 23-ம் தேதி பதவியேற்றுக் கொள்கிறார். 

தமிழகத்தின் பழமை வாய்ந்த சைவ சமய நெறிமுறைகளை கையாளும் மடங்களில் மதுரை ஆதீனமும் ஒன்று.  சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த மடத்தின் 292-வது குரு மகா சன்னிதானமாக அருணகிரிநாதர் இருந்து வந்தார். சுமார் 46 ஆண்டுகள் பீடாதிபதியாக இருந்த அருணகிரிநாதர் கடந்த 13-ம்  தேதி மரணம் அடைந்தார்.  இதையடுத்து அவரது இடத்திற்கு இளைய ஆதீனமாக இருந்த ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகளை நியமிப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. 

ஏற்கனவே ஆதீனம் அருணகிரிநாதர் மறைவுக்குப் பிறகு மடத்தின் தினசரி பூஜைகள் மற்றும் நிர்வாக பணிகளை இளைய ஆதீனம் கவனித்து வந்தார்.  அவரிடம் ஆதீனத்துக்கு சொந்தமான கிலோ கணக்கிலான நகைகள், பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் மற்றும் ரொக்கப்பணம் ஆகியவையும் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. 

இந்த நிலையில் 293-வது ஆதீனமாக ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முறைப்படி பதவியேற்கும் விழா வருகிற 23-ம் தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.  மதுரை தெற்கு ஆவணி மூல வீதியில் உள்ள ஆதீன மடத்தில் அன்றைய தினம் காலை 11 மணிக்கு பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது. தொடர்ந்து பல்வேறு சடங்கு சம்பிரதாயங்கள் நடைபெறுகின்றன.

பிற்பகல் 1. 30 மணிக்கு மகேஸ்வர பூஜையும் மாலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் குருமூர்த்தி வழிபாடு ஆகியவை நடைபெறுகின்றன. இரவு 8 மணி அளவில் பட்டிணப்பிரவேசமும், கொலு காட்சியும் நடைபெறுகின்றன. 

முன்னதாக காலை 10 மணியளவில் மறைந்த ஆதீனம் அருணகிரிநாதருக்கு குருபூஜை ஆதீன மடத்தில் நடைபெறுகிறது.  அதைத் தொடர்ந்து அவர் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்திலும் அபிஷேக ஆராதனைகளுடன் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.  இதைத்தொடர்ந்து 293-வது பீடாதிபதியாக இளைய ஆதீனம் ஹரிஹர ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பொறுப்பு ஏற்றுக்கொள்கிறார்.

இந்த விழாவில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள ஆதீனங்கள் கலந்து கொள்ள அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பாக தருமபுர ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம், குன்றக்குடி ஆதீனம், கோவை ஆதீனம் மற்றும் ஆன்மீக பெரியவர்கள் முக்கிய பிரமுகர்கள் விழாவில் பங்கேற்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து