முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்ணாமலையார் கோயிலில் துர்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம்

திங்கட்கிழமை, 23 ஆகஸ்ட் 2021      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

சென்னை : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா, மகள் செந்தாமரை ஆகியோர் நேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

ஆன்மிகத்தில் அதீத நம்பிக்கை கொண்டவர் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக சைவ மற்றும் வைணவத் தலங்களுக்குத் தொடர்ந்து சென்று, தமிழக முதல்வராகத் தனது கணவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்க வேண்டும் என வேண்டிக்கொண்டார். 

இந்நிலையில் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த மே மாதம் பதவியேற்றுக் கொண்டார். தனது வேண்டுதல் நிறைவேறியதால், சைவ மற்றும் வைணவத் தலங்களுக்குச் சென்று துர்கா ஸ்டாலின் நேர்த்திக் கடன் செலுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

திருமலையில் உள்ள வைணவத் திருத்தலமான ஸ்ரீவெங்கடாஜலபதி கோயிலுக்குக் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு துர்கா ஸ்டாலின் சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார். அதன் தொடர்ச்சியாக, சைவ திருத்தலமான திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் தனது மகள் செந்தாமரையுடன் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். மூலவர் மற்றம் அம்மன் சன்னதிகளில் சிறப்புப் பூஜை நடைபெற்றது. பின்னர் அவர்களுக்கு சிவாச்சாரியார்கள் பிரசாதம் வழங்கினர்.

முதல்வரின் குடும்பத்தினர் சுவாமி தரிசனம் செய்ததால், பொது மற்றும் கட்டண தரிசனப் பாதையில் சென்ற பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். தரிசனம் முடிந்து வி.ஐ.பி.க்கள் புறப்பட்டுச் சென்றதும், வரிசையில் காத்திருந்த பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

துர்கா ஸ்டாலினைப் போன்று, அவரது மகள் செந்தாமரையும், ஆன்மிகத்தில் பற்று கொண்டவர். கொரோனா ஊரடங்கு எதிரொலியாக, திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தனது தந்தை மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வராகப் பதவியேற்க வேண்டும் என வேண்டிக்கொண்டு, சிறப்பு அனுமதி பெற்று கடந்த சித்ரா பவுர்ணமியன்று கிரிவலம் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து