முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அறநிலையத் துறையின் புதிய விதிகளை எதிர்த்து வழக்கு: அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

புதன்கிழமை, 1 செப்டம்பர் 2021      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கோயில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான இந்து சமய அறநிலையத்துறையின் புதிய விதிகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு குறித்து, தமிழக அரசு 4 வாரங்களில் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோயில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள், பரம்பரை அறங்காவலர்கள் நியமனம் மற்றும் பணி நிபந்தனை தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை பணி புதிய விதிகள் 2020ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டன. அதில், 18 வயதிலிருந்து 35 வயது உடையவர்களை மட்டும் அர்ச்சகராக நியமிக்கலாம் என்றும், ஓராண்டு பயிற்சி முடித்தவராக இருக்க வேண்டும் என்றும் விதிகள் உள்ளன.

இந்த விதிகளை எதிர்த்து, அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் முத்துகுமார் மற்றும் சி.ஐ.டி. நகரைச் சேர்ந்த எஸ்.ஸ்ரீதரன் என்பவர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த நிலையில், பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் என்னும் இடத்தில் உள்ள மதுரகாளியம்மன் கோவில் பரம்பரை பூசாரிகள் எட்டுப் பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிதாக வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அதில், எட்டுக் குடும்பங்களிலும் மூத்தவர்கள் இறந்தால் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஆண், அடுத்த பூசாரியாக நியமிக்கப்படுவார் என்றும், பல ஆண்டுகளாக இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மரபுக்கு மாறாக வயது வரம்பு நிர்ணயிப்பது சட்டவிரோதமானது எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்து சமய அறநிலையச் சட்டப்படி பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள மரபுகளின்படி நியமனம் நடைபெற வேண்டும் என்பதால், இந்தப் புதிய விதிகளை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, 4 வாரத்தில் தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு, ஏற்கெனவே தொடரப்பட்ட வழக்குகளையும் இந்த வழக்கோடு சேர்த்து விசாரணைக்குப் பட்டியலிட உத்தரவிட்டு விசாரணையை 5 வாரங்களுக்குத் தள்ளிவைத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து