முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீர்ப்பாயங்களை நடத்த விருப்பம் இல்லை என்றால் சட்டங்களை ரத்து செய்து விடுங்கள்: மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட் அதிருப்தி

திங்கட்கிழமை, 6 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்புகளுக்கும் உத்தரவுகளுக்கும் மத்திய அரசு மதிப்பளிப்பதில்லை என தலைமை நீதிபதி என்.வி.ரமணா வருத்தம் தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதிலும் உள்ள தீர்ப்பாயங்களின் பணியிடங்களை நிரப்பாதது குறித்து தலைமை நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார். தங்களது பொறுமையை மிகவும் சோதித்து பார்ப்பதாகவும் தலைமை நீதிபதி என்.வி.ரமணா வருத்தம் தெரிவித்துள்ளார். தீர்ப்பாயங்களை நடத்த விருப்பம் இல்லை என்றால் சட்டங்களை ரத்து செய்துவிடுமாறும் தலைமை நீதிபதி காட்டமாக கூறியுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள பல்வேறு தீர்ப்பாயங்களில் நிறைய இடங்கள் காலியாகவே இருக்கின்றன. இதனை நிரப்ப வேண்டும் என தொடர்ந்து மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தும் கால அவகாசம் வழங்கியும் கூட இந்த பணியிடங்களை நிரப்பவில்லை. எனவே இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது கடுமையான அதிருப்தியையும், கோபத்தையும் வெளிப்படுத்திய தலைமை நீதிபதி என்.வி.ரமணா எங்களது தீர்ப்புகளுக்கும் உத்தரவுகளுக்கும் மத்திய அரசு மதிப்பு வழங்குவதில்லை என தனது கடுமையான அதிருப்தியை தெரிவித்தார். நாடு முழுவதும் உள்ள தீர்ப்பாயங்களின் பணியிடங்களை நிரப்பாதது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார். எங்களது பொறுமையை மிகவும் சோதிக்க வேண்டாம் எனவும் அவர் மத்திய அரசை கேட்டுக்கொண்டார்.

பரிந்துரைகள் அளிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் தீர்ப்பாயங்களில் காலியாக உள்ள பணியிடங்களை மத்திய அரசு இன்னும் நிரப்பாமல் இருப்பது ஏன் என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திற்கு மத்திய அரசு விரைந்து ஒப்புதல் அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் தீர்ப்பாயங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது வேதனை அளிக்கிறது என அவர் கூறினார். இப்படிவொரு செயல்படாத தீர்ப்பாயங்களை வைத்திருப்பதற்கு பதிலாக தீர்ப்பாயங்கள் அத்தனையையும் மூடிவிடலாமா, அப்படி மூடி விடலாம் என்றால் அதற்கான மாற்று ஏற்பாடு என்ன, தீர்ப்பாயங்கள் இயங்குவது தொடர்பான அனைத்து சட்டங்களையும் நீக்கி விடலாமா என்ற பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.

செப்டம்பர் 13ஆம் தேதி வரை கடைசியாக உங்களுக்கு கால அவகாசம் வழங்குகிறோம். அப்படி இல்லை என்றால் நாங்களே அந்த பணிகளை செய்ய வேண்டி வரும் என்ற எச்சரிக்கையையும் அவர் விடுத்துள்ளார். வழக்கு விசாரணையானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இதுதொடர்பாக மத்திய அரசுக்கு தகவல்களை தெரிவிப்பதாக கூறினார். அப்போது மீண்டும் தலைமை நீதிபதி நீங்கள் தகவல் எல்லாம் சொல்ல வேண்டாம். உடனடியாக எங்களது தீர்ப்பை செயல்படுத்த கூடிய வேலைகளை பாருங்கள் எனக்கூறி வழக்கை ஒத்தி வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து