முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாக்பூரில் கொரோனா 3-வது அலை வந்து விட்டது: அமைச்சர் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 7 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

மும்பை : மகராஷ்டிரத்தின் நாக்பூர் பகுதியில் கொரோனா மூன்றாவது அலை ஏற்கனவே தாக்கத் தொடங்கி விட்டதாக அமைச்சர் நிதின் ரௌத் தெரிவித்துள்ளார். 

நாக்பூரில் நாள்தோறும் பதிவாகும் கொரோனா புதிய பாதிப்பு இரண்டு மடங்காகியிருப்பதால், இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். நாக்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை பூஜ்யமாகவே உள்ளது.

அமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு, நாக்பூரில் கட்டுப்பாடுகளை விதிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது. வெகு நாள்களுக்குப் பிறகு நகரில் கொரோனா பாதிப்பு இரண்டு மடங்காகப் பதிவாகியுள்ளது. மூன்றாவது அலை வந்து விட்டது என்று அமைச்சர் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.  ஆனால், வெறும் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதற்காகவா மூன்றாவது அலை வந்து விட்டதாக அறிவிப்பது என்ற கேள்வி பலருக்கும் எழலாம். 

அதற்குக் காரணத்தை அவர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு விளக்கியுள்ளார். அதாவது, கொரோனா தடுப்பூசி இரண்டு தவணை செலுத்தியவர்களுக்கும், சில குழந்தைகளுக்கும்தான் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால்தான் மூன்றாவது அலை தொடங்கி விட்டதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இது போலத்தான் எந்த சத்தமும் இல்லாமல் கொரோனா இரண்டாம் அலை உருவானது. அனைத்துத் துறை அதிகாரிகளையும் சந்தித்த பின், இன்னும் 2 அல்லது 3 நாள்களுக்குள் கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்படும். ஏற்கனவே, நாக்பூரில் உள்ள கடைகள் மற்றும் உணவகங்களுக்கு நேரக் கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார். 

இதற்கிடையே, நாக்பூரில் உள்ள தத்தா மேகே மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு எம்.பி.பி.எஸ். பயிலும் 10 மாணவிகளுக்கும், ஒரு மாணவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களுடன் கல்வி பயின்று வந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.  கொரோனா உறுதி செய்யப்பட்ட மாணவர்கள் உள்பட கல்லூரியில் பயிலும் 150 எம்.பி.பி.எஸ். மாணவர்களும் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் கொரோனா தடுப்பூசி இரண்டு தவணைகளையும் செலுத்திக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் ஒரு சிலருக்கே அறிகுறிகள் தென்பட்டதாகவும், அனைவரும் நலமாக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து