தமிழக புதிய கவர்னருக்கு ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். வாழ்த்து

OPS-EPS Gov-2021-09-10

தமிழகத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவிக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம்,  இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  

தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோகித் பதவி வகித்து வந்தார். சமீபத்தில் அவருக்கு பஞ்சாப் கவர்னர் பதவி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. இந்த நிலையில் அவர் பஞ்சாப் கவர்னராக நியமிக்கப்பட்டு, தமிழகத்திற்கு புதிய கவர்னராக ஆர்.என்.ரவியை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். 

இந்த நிலையில், தமிழகத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவிக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

நாகலாந்து அமைதி பேச்சுவார்த்தையில் முக்கிய பங்கு வகித்த ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஆர்.என்.ரவி தமிழகத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளதை அ.தி.மு.க. சார்பில் வரவேற்கிறேன். அவரது நியமனம் நிச்சயமாக தமிழகத்தின் வளர்ச்சியை பெரிதும் உயர்த்தும். அவர் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளனர்.

இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,  கேரளாவில் சிறந்த காவல்துறை தலைமை அதிகாரியாகவும், நாகலாந்து மாநில ஆளுநராகவும் சிறப்பாக பணியாற்றி தற்பொழுது தமிழ்நாட்டின் புதிய கவர்னராக  பொறுப்பேற்க உள்ள பீகாரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரியான உங்களது பணி சிறக்க  வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து