முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் பாரதியார் பெயரில் தனி இருக்கை அமைக்கப்படும்: பிரதமர் மோடி அறிவிப்பு

சனிக்கிழமை, 11 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் பாரதியார் பெயரில் தனி இருக்கை அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

சர்தார்தாம் பவன் மற்றும் சர்தார்தாம் 2-வது பெண்கள் விடுதி பூமி பூஜையை, காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். குஜராத் முதல்வர்  மற்றும் துணை முதல்வர் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி,  நவீன கட்டிடம், மாணவிகள் விடுதி மற்றும் நவீன நூலகம் ஆகியவை இளைஞர்களை மேம்படுத்தும்.  தொழில்முனைவு வளர்ச்சி மையம், குஜராத்தின் வலுவான வர்த்தக அடையாளத்தை மேம்படுத்தும் மற்றும் சிவில் சர்வீஸ் மையம், சிவில் சர்வீஸ் பணி, பாதுகாப்பு மற்றும் நீதி சேவைகளில்  ஆர்வம் உள்ள இளைஞர்களுக்கு, புதிய வழிகாட்டுதலை அளிக்கும்.  நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும் நிறுவனமாக மட்டும் சர்தார் தாம் மாறாமல்,  சர்தார் சாஹிப்பின் லட்சியங்களுடன் வாழ எதிர்கால தலைமுறையினரை ஊக்குவிக்கும்.   

உலக வரலாற்றில் செப்டம்பர் 11-ம் தேதி, மனித இனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட தினமாக அறியப்படுகிறது.  ஆனால், இந்த தேதி, ஒட்டுமொத்த உலகத்துக்கும் அதிகம் கற்றுக் கொடுத்தது.  ஒரு நூற்றாண்டுக்கு முன் 1893 செப்டம்பர் 11-ம் தேதி, உலக மதங்களின் மாநாடு சிகாகோவில் நடந்த போது, சுவாமி விவேகானந்தர், இந்தியாவின் மனிதநேய மதிப்புகளை உலக அரங்கில் அறிமுகப்படுத்தினார்.  இது போன்ற மனிதநேயங்கள் மூலமாக மட்டுமே, செப்டம்பர் 11 போன்ற சோகங்களுக்கு தீர்வு ஏற்படும், என உலகம் இன்று உணர்கிறது.

செப்டம்பர் 11-ம் தேதி மற்றொரு பெரிய நிகழ்வும் உள்ளது. இந்தியாவின் மகாகவி, தத்துவஅறிஞர் மற்றும் சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணிய பாரதியின் 100-வது நினைவு தினம்.  சர்தார் சாஹிப் கண்ட ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற தத்துவம், மகாகவி பாரதியின் தமிழ் எழுத்துக்களில் முழு தெய்வீகத்துடன் ஜொலித்துக் கொண்டிருக்கிறது. சுப்பிரமணிய பாரதி சுவாமி விவேகானந்தரிடம் இருந்து ஊக்கம் பெற்றார்  மற்றும் ஸ்ரீஅரபிந்தோவால் ஈர்க்கப்பட்டார். காசியில் பாரதி வாழ்ந்த போது, தனது சிந்தனைகளுக்கு புதிய வழிகாட்டுதல்களையும், சக்தியையும் அளித்தார். பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில், சுப்பிரமணிய பாரதி பெயரில் ஒரு இருக்கை அமைக்கப்படும். பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தின் கலைகள் புலத்தில் தமிழ்படிப்புகளுக்கான சுப்பிரமணிய பாரதி இருக்கை அமைக்கப்படும். மனிதநேய ஒற்றுமை மற்றும் இந்திய ஒற்றுமையை, சுப்பிரமணிய பாரதியார் எப்போது சிறப்பு முக்கியத்துவம் அளித்தார். அவரது கொள்கைகள் இந்தியாவின் சிந்தனை மற்றும் தத்துவத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். 

பிரதமரின் இந்த அறிவிப்பை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை இணை அமைச்சர் எல். முருகன் வரவேற்றுள்ளார். சுதந்திரத்திற்கு வித்திட்ட மிகப்பெரிய மகாகவியாக, தமது எழுத்துக்கள், பாடல்களின் வாயிலாக மக்களிடத்தில் உத்வேகத்தை ஏற்படுத்திய பாரதியாரைப் போற்றும் வகையில் பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது தமிழர்களுக்கும், தமிழ் மொழிக்கும் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

மேலும் அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,  சுப்பிரமணிய பாரதியின் 100-வது நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக வாரணாசி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை நிறுவுவதாக அறிவித்த பிரதமர்  நரேந்திர மோடிக்கு தமிழக மக்கள் சார்பாக நன்றிகள் என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து