நீட் தேர்வு விவகாரம் : சட்டசபையில் காரசார விவாதம் - அமளி: அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

ADMK 2021 09 13

Source: provided

சென்னை : நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக சட்டசபையில் தி.மு.க. - அ.தி.மு.க. எம்எல்ஏக்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

தமிழகத்தில் நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டு தமிழக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தது.

இந்த குழு தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் தமிழக சட்டசபையில் நேற்று மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

நேற்றைய சட்டசபை கூட்டத்திற்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கருப்புப் பட்டை அணிந்து வருகை தந்தனர்.நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட தனுஷ் மறைவுக்காகவும், வாணியம்பாடியில் சமூக ஆர்வலர் வெட்டிக் கொல்லப்பட்டதற்காகவும் கருப்பு பட்டை அணிந்து வந்ததாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தகவல் தெரிவித்தனர்.

நேற்று சட்டசபை கூடியதும்  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. கஞ்சா விற்பனை குறித்து காவல் துறையில் புகாரளித்த வாணியம்பாடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வெட்டி கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார் 

ஆனால் நீட் தேர்வு தொடர்பாக பேரவையில் மசோதா கொண்டு வருகிறோம்; இந்த சட்டத்தை எதிர்க்கட்சியும் இணைந்து நிறைவேற்றித்தர வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று அளித்த தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது?  என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

சட்டசபையில் கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளிக்கும் போது ஜெயலலிதா இருக்கும் போது கூட நீட் தேர்வு வரவில்லை  நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் மசோதா சட்டசபையில் இன்று (நேற்று) தாக்கல் செய்யப்படுகிறது என  கூறினார்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி கூறிய ஒரு கருத்து அவைக்குறிப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது. இதனால்   அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக சட்டசபையில்  தி.மு.க. - அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில்  இருந்து வெளிநடப்பு செய்தனர், இந்த நிலையில் நீட் தேர்வில் இருந்து விலக்குபெறும் மசோதாவை  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் தாக்கல் செய்தார். அந்த மசோதா நிறைவேறியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து