முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தலையீடு குறித்து தீவிரக் கண்காணிப்பு : மத்திய வெளியுறவுத்துறை செயலர் பேட்டி

சனிக்கிழமை, 25 செப்டம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

நியூயார்க் : பிரச்சினைகளுக்கு வழிகாட்டியாகக் காட்டிக்கொள்ளும் பாகிஸ்தான், இந்தியாவின் அண்டை நாடுகளில் பிரச்சினைகளைத் தூண்டிவிடுகிறது. ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தலையீடு குறித்து தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம் என்று மத்திய வெளியுறவுத்துறைச் செயலர் ஹர்ஸவர்தன் ஸ்ரிங்கலா தெரிவித்தார்.

குவாட் மாநாட்டில் பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன், அமெரிக்க அதிபர் ஜோ பிடன் ஆகியோர் வெள்ளை மாளிகையில் முதல் முறையாகச் சந்தித்துப் பேசினர்.

இந்தியா-அமெரிக்கா இடையே இரு நாட்டுத் தலைவர்களான பிரதமர் மோடி, அதிபர் ஜோ பிடன் சந்திப்பு, குவாட் மாநாட்டில் ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா, அமெரிக்கத் தலைவர்கள் குறித்த சந்திப்பு குறித்து மத்திய வெளியுறவுத்துறைச் செயலர் ஹர்ஸவர்த்தன் ஸ்ரிங்கலா ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பிடன் இடையிலான சந்திப்பு மற்றும் குவாட் மாநாட்டில் தலைவர்கள் மத்தியிலான சந்திப்பு ஆகியவற்றில் ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தலையீடு, பங்கு குறித்து கவனத்துடன் ஆய்வு செய்யப்படும், கண்காணிக்கப்படும் என்று பேசப்பட்டுள்ளது.

தீவிரவாதப் பிரச்சினையில் பாகிஸ்தான் பங்கு இருக்கிறது. இதுகுறித்து குவாட் அமைப்பின் நாடுகள் அதன் காரணிகளை ஆய்வு செய்யும்.

சில நேரங்களில் பாகிஸ்தானைப் பார்க்கும்போது பிரச்சினைகளுக்கு வழிகாட்டியாகத் தன்னைக் காட்டிக் கொள்கிறது. பல நேரங்களில் இந்தியா தனது அண்டை நாடுகள் மற்றும் பிற நாடுகளில் உள்ள பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும்போது, அங்கு தூண்டிவிடுபவராக பாகிஸ்தான் இருக்கிறது.

தீவிரவாதம் என்பது மிகவும் கவலைக்குரிய விஷயம் என்று இந்தியா, அமெரிக்கத் தலைவர்கள் இடையிலான சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது. தீவிரவாதிகள் நிதியுதவி வழக்குவதைத் தடுத்தல், போக்குவரத்து உதவிகளை வழங்குவதைத் தடுத்தல், தங்கள் மண்ணில் தீவிரவாதச் செயல்களுக்கு இடம் கொடுக்காமல் தடுத்தல் போன்றவற்றையும் வலியுறுத்தினர்.

தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை குறித்து இந்தியா, அமெரிக்கா நாடுகள் இணைந்து விரைவில் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு நடத்தும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தலைவராக இருந்தபோது, நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 2,593 குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும் இரு தலைவர்களும் பேசினர் என்று ஸ்ரிங்கலா தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து