முக்கிய செய்திகள்

பெட்ரோல் விலை மீண்டும் 100 ரூபாயை நெருங்கியது: டீசல் விலையும் உயர்வு

வெள்ளிக்கிழமை, 1 அக்டோபர் 2021      வர்த்தகம்
petroal-2021-09-30

மீண்டும் 100 ரூபாயை நெருங்கும் பெட்ரோல் விலையால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். டீசல் விலையும் உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, ஒருசில மாதங்கள் வரை பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இதன் பின்னர், கடந்த ஜனவரி மாதம் முதல் மீண்டும் எண்ணெய் நிறுவனங்கள் படிப்படியாக விலையை உயர்த்தின. அதன் பிறகு கொரோனா 2-ம் அலையின்போது சற்று கட்டுக்குள் இருந்தது. பின்னர் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு தொடர்ந்து பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதுவரை இல்லாத அளவு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100-க்கு விற்பனையானது. 

இதைஅடுத்து பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். எரி பொருட்களின் விலை உயர்வை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என, பல்வேறு தரபினரும் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், தமிழக பட்ஜெட்டில் பெட்ரொல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது. கடந்த 20 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல்- டீசல் விலையில் மாற்றமில்லாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் விலை உயர்ந்துள்ளது.

 

சென்னையில் நேற்று முன்தினம் பெட்ரோல் லிட்டர் ரூ. 99.36 ஆகவும், டீசல் லிட்டர் ரூ 94.45 ஆகவும் விற்பனையானது. இந்நிலையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து ரூ 99.58 ஆகவும், டீசல் லிட்டருக்கு 29 காசுகள் உயர்ந்து ரூ 94.74 ஆகவும் விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து