முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக். பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட வெளிநாடுகளில் சொத்துக்களை குவித்த 35 உலக தலைவர்கள் !

திங்கட்கிழமை, 4 அக்டோபர் 2021      உலகம்
Image Unavailable

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், ஜோர்டான் மன்னர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் வரி ஏய்ப்பு செய்து வெளிநாடுகளில் முதலீடு செய்து உள்ளதும், சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதும் அம்பலமாகி உள்ளது.

பிரபலங்கள் முறைகேடாக வெளிநாடுகளில் பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதும், சொத்துக்களை வாங்கி குவித்து உள்ளதும் தொடர்பான பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு பனாமா பேப்பர்ஸ் வெளியாகி உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது பண்டோரா பேப்பர்ஸ் ஆவணங்கள் வெளியாகி உள்ளது.

சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு மூலம் இந்த பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. நிதி சேவை வழங்கும் 14 நிறுவனங்களில் இருந்து கசிந்த ஒரு கோடியே 19 லட்சம் ஆவணங்களை 600-க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் புலனாய்வு செய்து இந்த பட்டியலை வெளியிட்டு உள்ளனர்.

இதில் அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் வரி ஏய்ப்பு செய்து வெளிநாடுகளில் முதலீடு செய்து உள்ளதும், சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதும் அம்பலமாகி உள்ளது. இந்த பட்டியலில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், ஜோர்டான் மன்னர், செக்குடியரசு பிரதமர், இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் உள்ளிட்ட சுமார் 35 தற்போதைய மற்றும் முன்னாள் தலைவர்கள் பெயர் இடம் பெற்று உள்ளன. 91 நாடுகளின் பிரபலங்களின் பெயர் இதில் உள்ளன.

இம்ரான்கானுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இம்ரான்கான் அமைச்சரவையில் நிதி மந்திரியான பயாஸ் அகமது கரீப், அவரது குடும்பத்தினர் மற்றும் சில மந்திரிகள் கோடிக்கணக்கான பணத்தில் நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளை ரகசியமாக வைத்திருப்பது தெரிய வந்தது.

ஜோர்டான் மன்னர் அப்துல்லா வெளிநாடுகளில் ரூ.745 கோடிக்கு சொத்து குவித்ததற்கான ஆவணங்களும் வெளியாகி உள்ளது. அவர் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் 14 ஆடம்பர பங்களாக்களை ரகசியமாக வாங்கி உள்ளார். மேலும் 38 போலி கம்பெனிகளை உருவாக்கி உள்ளார்.

 

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பெயர் நேரடியாக இடம் பெறவில்லை. ஆனால் மொனாக்கோவில் அவரது கூட்டாளிகள் ரகசியமாக சொத்து சேர்த்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள 956 நிறுவனங்களின் ரகசிய ஆவணங்கள் மூலம் பல்வேறு நாடுகளின் அதிகாரமிக்க அரசியல் தலைவர்கள், உயர் அதிகாரிகள், மந்திரிகள், தூதர்கள், பிரபலங்கள் என 356 பேர் இதில் சிக்கி உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து