முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கையில் ஹர்ஷ்வர்தன்

செவ்வாய்க்கிழமை, 5 அக்டோபர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ்வர்தன், கொழும்பில் பிரதமர் மகிந்த ராஜபக்சேவை சந்தித்துப் பேசினார். இதுதொடர்பாக ஹர்ஷ்வர்தன் கூறுகையில், இந்தியாவின் நெருங்கிய நண்பரான இலங்கை பிரதமர் ராஜபக்சேவை சந்தித்துப் பேசினேன். இந்த பேச்சு இருநாடுகளின் பரஸ்பர நல்லுறவுக்கு வலு சேர்க்கும் வகையில் பயனுள்ளதாக அமைந்தது. தொடர்ந்து, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவையும் சந்திக்க உள்ளேன் என தெரிவித்தார்.

இதையடுத்து, தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணம் பலாலிக்கு சென்ற ஹர்ஷ்வர்தன், அங்கு இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்டு வரும் விமான நிலையப் பணிகளைப் பார்வையிட்டார்.

------------------

புதிய பிரதமர் பதவியேற்றார்

டோக்கியோவில் உள்ள இம்பீரியல் மாளிகையில் நடைபெற்ற விழாவில் ஜப்பான் பிரதமராக புமியோ கிஷிடா பதவியேற்றார். அதை தொடர்ந்து, அவரது தலைமையிலான புதிய மந்திரி சபை பதவியேற்றது. ஜப்பானின் நீண்ட காலம் பிரதமர் பதவியில் இருந்தவர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரரான ஷின்ஜோ அபே, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அவரின் நம்பிக்கைக்குரியவராக இருந்து வந்த யோஷிஹைட் சுகா புதிய பிரதமராக பதவி ஏற்றார்.

ஆரம்பத்தில் மக்கள் மத்தியில் யோஷிஹைட் சுகாக்கு பெரிய அளவு செல்வாக்கு இருந்து வந்த போதிலும், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுப்பதில் மிகவும் மந்தமாக செயல்பட்டதாக அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. அதோடு கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியதால் மக்கள் மத்தியில் அவரது செல்வாக்கு பெரிதும் சரிந்தது குறிப்பிடத்தக்கது.

____________

விண்வெளியில் படப்பிடிப்பு 

சர்வதேச விண்வெளி மையத்தில் வைத்து படப்பிடிப்பு நடத்த உள்ளதாக ரஷியா அறிவித்துள்ளது. இதற்காக, ரஷியா ஒரு நடிகை மற்றும் ஒரு திரைப்பட இயக்குநரை வெகு விரைவில் விண்வெளிக்கு அனுப்ப தயாராகி வருகிறது.ஏற்கனவே இந்த ஆண்டின் தொடக்கத்தில்,  ஹாலிவுட் படம் ஒன்று விண்வெளியில் வைத்து படமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அந்த முயற்சி இன்னும் தொடங்கப்படவில்லை. முன்னதாக புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான ‘மிஷன் இம்பாசிபில்’ பட கதாநாயகன் டாம் குரூஸ்,  நாசா மற்றும் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து  இந்த திட்டம் குறித்து அறிவித்திருந்தார். நடிகை யூலியா பெரிசில்ட் (37 வயது) மற்றும் திரைப்பட இயக்குநர் ஷிபென்கோ (38 வயது) ஆகியோர் பழைய சோவியத்-கசகஸ்தானில் உள்ள பைகோனர் காஸ்மோட்ரோமில் இருந்து வெகுவிரைவில் விண்வெளிக்கு பயணம் செய்ய உள்ளனர்.

___________

தலிபான்கள் புதிய முடிவு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடந்த கூட்டத்தில், அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகள், ஒவ்வொரு அமைச்சகத்தின் பணிகளை மேம்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பது உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

குறிப்பாக உள்ளூர் மக்களுக்கு பாஸ்போர்ட், வெளிநாட்டில் இருந்து வருவோருக்கு விசா வழங்கும் பணிகளை மீண்டும் தொடங்க உள்துறை அமைச்சகத்திற்கு அறிவுத்தப்பட்டது. காபூல் உள்ளிட்ட நகரங்களில் கொள்ளையை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், முப்படைகளின் கூட்டு பாதுகாப்பு ஆணையத்தை உருவாக்கவும் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து