முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் நரேந்திர மோடிக்கு வந்த பரிசுகள்: மின்னணு ஏலத்தில் பல பொருட்களை வாங்க யாரும் முன்வரவில்லை

வியாழக்கிழமை, 7 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : பிரதமர் மோடிக்குப் பரிசாகக் கொடுக்கப்பட்ட பல பரிசுப் பொருட்கள் மின்னணு முறையில் ஏலம் விடப்பட்ட நிலையில், அதில் பல பொருட்களை வாங்க ஆட்கள் யாரும் முன்வரவில்லை.

பிரதமர் நரேந்திர மோடி தான் பெற்ற பரிசுப் பொருட்களை ஏலம் விட்டு அதன் மூலம் கிடைக்கும் நிதியை அரசின் திட்டங்களுக்கு வழங்கி வருகிறார். பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட 1,300-க்கும் மேற்பட்ட பரிசுப் பொருட்களை ஏலம்விட இணையதளம் வாயிலாக நடத்தப்படும் மின்னணு ஏல முறை கடந்த மாதம் 17-ம் தேதி தொடங்கப்பட்டது.

ஜப்பானில் நடந்து முடிந்த ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள், போட்டிகளில் தாங்கள் பயன்படுத்திய உபகரணங்களை பிரதமர் மோடிக்கு வழங்கினர். இது மட்டுமல்லாமல் பிரதமர் மோடிக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட சிற்பங்கள், ஓவியங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் ஏலம் விடப்பட்டன.

ஏலத்தில் பங்கேற்போர் இணையதளம் மூலம் அக்டோபர் 7-ம் தேதி வரை பங்கேற்கலாம் என மத்திய கலாச்சார அமைச்சகம் அறிவித்திருந்தது. ஏலத்தின் மூலம் கிடைக்கும் நிதி கங்கை நதியைத் தூய்மைப்படுத்தும் ‘நவாமி கங்கா’ திட்டத்திற்குப் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஏலத்தில் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட பல பரிசுப் பொருட்களை ஏலத்தில் எடுக்க ஆட்கள் முன்வரவில்லை. அதேசமயம், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வழங்கிய பாட்மிண்டன் ராக்கெட் ரூ.80 லட்சத்துக்கு அடிப்படை விலை வைக்கப்பட்டது. அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பிரதமர் மோடி இருப்பது போன்ற ஓவியம் ரூ.3.50 லட்சத்து அடிப்படை விலை வைக்கப்பட்டது. இந்த இரு பொருட்களும் ஏலம் எடுக்கப்படவில்லை.

மின்னணு ஏல இணையதளத்தில் நேற்றைய நிலவரப்படி, 1,348 பொருட்களை ஏலத்தில் எடுக்க யாரும் முன்வரவில்லை. ஆனால், கலாச்சாரத்துறை அமைச்சகம், 1,083 பொருட்களுக்கு ஏற்கெனவே ஏலம் கேட்கப்பட்டுள்ளது. 162 பொருட்களுக்கு மட்டும்தான் யாரும் ஏலம் கேட்கவில்லை எனத் தெரிவித்துள்ளது.

ஒலிம்பிக் குத்துச்சண்டை வீராங்கனை லாவ்லினா போர்கோகெயின் பயன்படுத்திய கிளவுஸ் ரூ.80 லட்சத்துக்கும், ஆடவர், மகளிர் ஹாக்கி வீராங்கனைகள் பயன்படுத்திய அவர்கள் கையொப்பமிட்ட ஹாக்கி மட்டைகள் ஒவ்வொன்றும் ரூ.80 லட்சத்துக்கு ஏல அடிப்படைத் தொகையாக வைக்கப்பட்டது. ஆனால், யாரும் இவற்றை வாங்க ஆர்வம் காட்டவில்லை.

ரூ.5000 முதல் ரூ.90 லட்சம் வரை அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்ட பல பொருட்களை வாங்க மக்கள் யாரும் ஆர்வம் காட்டவில்லை. ஒவியங்கள், புகைப்படங்கள், பிரதமர் மோடி தனது தாயுடன் இருக்கும் புகைப்படம் ஆகியவையும் விற்பனையாகவில்லை.

அதேசமயம், ஏலம் தொடங்கிய முதல் வாரத்தில் சில பொருட்களுக்கு ஏலத்தில் போட்டி கடுமையாக இருந்தது. ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஈட்டி எறியும் வீரர் நீரஜ் சோப்ரா பயன்படுத்திய ஈட்டி ரூ.1 கோடி அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டு, அது ரூ.1 கோடியே 50 ஆயிரத்துக்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து