முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் பொது இடங்கள், நெடுஞ்சாலைகளில் உள்ள சிலைகளை 3 மாதங்களில் அகற்ற வேண்டும்: அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

வியாழக்கிழமை, 7 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

தமிழகம் முழுவதும் பொது இடங்கள், நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட இடங்களில் உள்ள சிலைகளை 3 மாதங்களில் அடையாளம் கண்டு அகற்ற வேண்டும் எனத் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலூர் மாவட்டம், அரக்கோணம் தாலுக்கா, கோனுர் கண்டிகை கிராமத்தில் உள்ள மேய்கால் புறம்போக்கு நிலத்தில் அம்பேத்கர் சிலை நிறுவப் பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனுமதி பெறாமல் சிலை வைக்கப்பட்டுள்ளதால், சிலையை அகற்ற தாசில்தார் உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து, அந்த கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் வீரராகவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நெடுஞ்சாலைகளில் சிலைகள் வைக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், சிலையை அகற்றியதில் எந்தத் தவறும் இல்லை என, அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சட்ட விதிகள் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம் எனத் தெரிவித்த நீதிபதி, தமிழகம் முழுவதும் பொது இடங்கள், நெடுஞ்சாலைகள், அரசு நிலங்கள், பொதுச் சாலைகள், மேய்க்கால் புறம்போக்கு ஆகிய இடங்களில் உள்ள சிலைகளை 3 மாதங்களில் அடையாளம் கண்டு அகற்ற வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டார். மேலும், பொதுமக்கள் உரிமைகளை பாதிக்காத வகையில், சிலைகள் மற்றும் கட்டுமானங்களை அமைக்க அனுமதி வழங்குவது தொடர்பாக விரிவான விதிகளை வகுக்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் தலைவர் பூங்கா உருவாக்கி சாலைகள் மற்றும் பொது இடங்களில் இருக்கும் தலைவர் சிலைகளைப் பூங்காவில் வைத்துப் பராமரிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, சிலைகள் பராமரிப்பதற்கான செலவுகளைச் சிலை வைக்க அனுமதி பெற்றவர்களிடம் வசூலிக்க வேண்டும் எனவும், சிலைகள் பராமரிப்புத் தொகை செலுத்தாதவர்களிடம் இருந்து, அத்தொகையை வசூலிக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு, இந்த உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பாக, 6 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டார்.

அரசியல் கட்சிகள், மதம், சாதி, மொழி சார்ந்த அமைப்புகள் தங்கள் விருப்பப்படி சிலைகளை அமைப்பதாகக் குற்றம் சாட்டிய நீதிபதி, தலைவர்கள் சிலைகளை வைக்க அனைவருக்கும் உரிமை உண்டு, அதேசமயம் பொது இடங்களில் சிலைகள் வைக்கக்கூடாது எனத் தெரிவித்தார். சிலைகள் தாக்கப்பட்டு சட்டம் - ஒழுங்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதி, தலைவர்கள் பிறந்த நாள், நினைவு நாள் நேரங்களில் நடைபெறும் நிகழ்வுகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகத் தெரிவித்தார்.

சமுதாயத்துக்காகத் தியாகம் செய்த தலைவர்களை எந்த ஒரு தருணத்திலும் சாதி ரீதியாக அடையாளப்படுத்தக் கூடாது. அதை அவர்கள் கற்பிக்கவில்லை என்றும் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார். பல இடங்களில் சிலைகள் பராமரிக்கப்படுவதில்லை என்றும், சிலைகள் சேதப்படுத்தப்படுதல், அவமரியாதை செய்தல் போன்ற செயல்களால் வன்முறை வெடிப்பதாகவும் இதை அனுமதிக்கக் கூடாது எனவும் நீதிபதி அறிவுத்தினார்.

ஆட்சி அதிகாரத்துக்கு வரும் கட்சி, தங்கள் தலைவர்களின் சிலைகளை வைப்பதாகவும் தெரிவித்தார். மேலும், தனியார் இடங்களில் சிலை வைப்பது அவர்களின் விருப்பம் எனத் தெரிவித்த நீதிபதி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை திறமையாக அமல்படுத்தாததால்தான் சில இடங்களில் பதற்றமான சூழ்நிலை உருவாவதாகக் குற்றம் சாட்டினார். மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு பல ஆண்டுகளாக நிலவும் சாதி மோதல்களைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

பொது இடங்கள், சாலைகளில் சிலைகள் வைப்பதைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும், இல்லையென்றால் மக்கள் மனதில் தற்போது நிலவும் அச்சத்தைப் போக்க முடியாது என நீதிபதி தெரிவித்து, வழக்கை முடித்து வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து