முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆயுதபூஜையை முன்னிட்டு சென்னையிலிருந்து அக். 12, 13-ம் தேதியில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்: அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

வியாழக்கிழமை, 7 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் வருகிற 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு பயணம் செய்யும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும்.  சென்னையில் இருந்து ஊருக்கு செல்வோர் எண்ணிக்கையும் அதிக அளவில் இருக்கும். இதனால், பேருந்துகளில் கூட்ட நெரிசல் ஏற்படாமல் தவிர்க்க அரசு போக்குவரத்து துறை சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது. அதன்படி, வெளியூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரெயில் நிலைய பேருந்து நிலையம், பூந்தமல்லி மற்றும் கோயம்பேடு ஆகிய 3 இடங்களில் இருந்து இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இருந்து, ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு வருகிற 12-ந் தேதியும், 13-ந் தேதியும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதற்காக வருகிற ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு 12-ந்தேதி, 13-ந்தேதி ஆகிய 2 நாட்களில் சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிற பின்வரும் வழித்தடப்பேருந்துகள் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளின் போது இயக்கப்பட்டது போல் தாம்பரம் ரெயில் நிலைய பஸ் நிலையம், பூந்தமல்லி பஸ் நிலையம்,  கோயம்பேடு பஸ் நிலையங்களில் இருந்து இயக்கப்படும். இதர பஸ்கள் வழக்கம் போல் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்.

இதில் தாம்பரம் ரெயில் நிலைய பஸ் நிலையத்தில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பஸ்கள் போளூர், சேத்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பஸ்கள் இயக்கப்படும். திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் செல்லும் பஸ்களும், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பஸ்களும் இயக்கப்படும். பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி, திருப்பதி செல்லும் பஸ்கள் இயக்கப்படும்.

கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து மேல் குறிப்பிட்டுள்ள ஊர்களை தவிர மற்ற ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் (கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் பஸ்கள்), மயிலாடுதுறை, தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, அரியலூர், ஜெயங்கொண்டம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூர் பஸ்கள் புறப்படும்.

 

எனவே பொது மக்கள் 3 பஸ் நிலையங்களில் இருந்து புறப்படும் பஸ் சேவையை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த பஸ் நிலையங்களுக்கு கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இணைப்பு பஸ்கள் மாநகர போக்குவரத்துக்கழகம் மூலம் இயக்கப்படும். பயணிகள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து பயணம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறி உள்ளார். பயணிகள் கூட்டம் அதிகமாக வந்தால் அதற்கேற்ப கூடுதலாக சிறப்பு பஸ்கள் வெளியூர்களுக்கு இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து