முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை திரும்பப் பெற்றது தேர்தல் ஆணையம்

வெள்ளிக்கிழமை, 8 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றுள்ளது.

புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் அட்டவணை வகுப்பினருக்கு வார்டுகள் ஒதுக்கீடு செய்வதில் குளறுபடி இருப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் திரும்பப்பெற்றுள்ளது.

புதுச்சேரியில் நகராட்சி மற்றும் பஞ்சாயத்துகளுக்கு கடந்த மாதம் 22-ம் தேதி மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவித்திருந்தது. இந்த தேர்தலில் பட்டியலினத்தவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கு வார்டுகள் ஒதுக்கீடு செய்வதில் குளறுபடி உள்ளதால் உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதி சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் குமார் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை சஞ்சய் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு விசாரணை செய்தது. இதற்கு புதுச்சேரி அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி வார்டுகள் சுழற்சி முறையில் ஒதுக்கப்பட்டதாக விளக்கமளித்திருந்தார்.

“10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சுழற்சி முறை ஒதுக்கீடு என்பது இரண்டு முறை மட்டுமே வழங்கப்படும். ஆனால் தொடர்ந்து சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்தால் பிரச்னை ஏற்படும். இதில் தவறுகள் இருப்பதால் இது தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும். சுழற்சி முறை ஒதுக்கீடு என்பது விதிகள் அடிப்படையில் மட்டுமே இருக்கவேண்டும். அதைத் தவிர்த்து அரசாணை அடிப்படையில் இருக்கக்கூடாது. வார்டு ஒதுக்கீட்டில் குறைகள் உள்ளது. இது சம்பந்தமாக உரிய விளக்கம் அளிக்கவில்லை என்றால் தேர்தலை தடைவிதிக்க நேரிடும்” எனச் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்தது. 

இதனிடையே கடந்த இரண்டு வாரங்களாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் கடந்த 3 நாட்களுக்கு முன் தேர்தல் முன்னேற்பாடுகளில் குளறுபடி இருப்பதை உறுதி செய்த நீதிபதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பைத் திரும்பப்பெற்று கொள்ளலாம். மேலும் அறிவிப்பை ரத்து செய்துவிட்டு ஐந்து நாட்களுக்குள் மாநில தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பை வெளியிட வேண்டும். மேலும் இட ஒதுக்கீடு விதிமுறைகள் முறையாக பின்பற்றி விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என தெரிவித்தனர்.

இதனையடுத்து புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 243K மற்றும் 243ZK ஆகியவற்றில் உள்ள ஷரத்துக்களின் படியும், இந்திய கிராம மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து சட்டம்,1973 பிரிவு 9A, புதுச்சேரி நகராட்சிகள் சட்டம் 1973 பிரிவு 15A-ல் அளிக்கப்பட்ட அதிகாரங்கள் மற்றும் இது தொடர்பான விதிகள் மற்றும் ஷரத்துக்கள் படியும் மாநில தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 22ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பை திரும்ப பெறுகிறது," என்று தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

இதனால் புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 23-ம் தேதி வெளியிட்ட நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துக்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பான அறிவிக்கையை திரும்பப் பெற்றுள்ளது. இதையடுத்து புதிய இட ஒதுக்கீடு விவரம் வெளியாகிறது.

அதன்படி புதுச்சேரி நகராட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் மற்றும் பதவிகளை அளித்தல் மற்றும் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்தல் ஆகியவை 1996-ன் 3-வது விதியின் படியும், புதுச்சேரி, மாநில தேர்தல் ஆணையம், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 5 நகராட்சிகளுக்கான பதவிகளுக்கு அட்டவணை வகுப்பினர், அட்டவணை வகுப்பு பெண்கள், பொது பெண்கள் மற்றும் பொதுப்பிரிவுகளுக்கான இட ஒதுக்கீடு பற்றிய புதிய அறிவிக்கையை புதுச்சேரி மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி புதுச்சேரி மற்றும் காரைக்கால் நகராட்சிகள்- பெண்களுக்கும் (பொது), உழவர்கரை மற்றும் மாஹே நகராட்சிகள் பொது ஒதுக்கீட்டிலும், ஏனாம் நகராட்சி- அட்டவணை இனத்தவருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் புதுச்சேரி, உழவர்கரை, காரைக்கால், மாஹே, ஏனாம் நகராட்சிகளிலுள்ள கவுன்சிலர் பதவிகளுக்கான இட ஒதுக்கீடு பட்டியல்களும் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக கடந்த மாதம் 22-ம் தேதி உள்ளாட்சித்தேர்தல் நடத்துவதற்காக வெளியிடப்பட்ட அறிவிப்பை திரும்பப் பெற்றுள்ள நிலையில், புதிய தேர்தல் அட்டவணை அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து