முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் 3 இடங்களில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 8 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னையில் மெட்ரோ ரெயில் திட்ட 2-ம் கட்ட பணிகள் நடைபெறும் 3 இடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து சென்ட்ரல் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு நடைபெற்று வரும் மெட்ரோ ரெயில் திட்ட பணிகளை பார்வையிட்டார்.  சென்னையில் தற்போது 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவை இயங்கி வருகிறது. சென்னை விமான நிலையத்தில் இருந்து அண்ணாசாலை, சென்ட்ரல் வழியாக திருவொற்றியூர் விம்கோநகர் வரை ஒரு வழித்தடத்திலும், மற்றொரு மார்க்கமாக விமான நிலையத்தில் இருந்து ஆலந்தூர், ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், வடபழனி, கோயம்பேடு, திருமங்கலம், அண்ணாநகர், கீழ்ப்பாக்கம், எழும்பூர், சென்ட்ரல் வரையும் மெட்ரோ ரெயில்கள் சென்று வருகின்றன.

மொத்தம் 45 கி.மீட்டர் தூரத்துக்கு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் 23 கி.மீட்டர் தூரம் சுரங்கத்திலும், 22 கி.மீட்டர் வழித்தடம் மேம்பாலம் வாயிலாகவும் ரெயில்கள் இயக்கப்படுகிறது. இதையடுத்து மெட்ரோ ரெயில் சேவையை விரிவாக்கம் செய்ய மாநில அரசு திட்டமிட்டது. அதன் படி 2-ம் கட்டமாக மாதவரம்- சிறுசேரி சிப்காட் வரை, மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை, கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி வரை 3 வழித்தடங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகள் சென்னையின் பல இடங்களில் நடைபெற்று வருகிறது.

இதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரெயில் திட்ட பணிகளை நேற்று காலை 11.30 மணியளவில் நேரில் சென்று பார்வையிட்டார். மெட்ரோ ரெயில் பணிகளை மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். தலைமைச் செயலகத்தில் இருந்து சென்ட்ரல் வந்த அவர், அங்கு நடைபெற்று வரும் மெட்ரோ ரெயில் திட்ட 2-ம் கட்ட பணிகளை பார்வையிட்டார்.

சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் நிதியுதவியுடன் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தால் ரூ.389.42 கோடியில் பிரமாண்ட சதுக்கம் அமைக்கும் பணி (சென்ட்ரல் ஸ்கொயர்) வேகமாக நடைபெற்று வருகிறது. அந்த பணிகளை மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள், லிப்ட் அமைக்கும் பணிகள், பார்க்கிங் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். இங்கு 500 கார்கள், 1000 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உருவாக்கப்பட்டு வருவதை மெட்ரோ ரெயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் பிரதீப் யாதவ் மு.க. ஸ்டாலினிடம் விளக்கிக் கூறினார்.

அதன் பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் கிண்டி கத்திப்பாராவுக்கு காரில் சென்றார். அங்கு கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழே நடைபெற்று வரும் நகர்ப்புற சதுக்கம் மற்றும் மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்தார். ரூ.14 கோடி செலவில் 5.9 லட்சம் சதுரடி பரப்பளவில் பூங்காக்கள், வணிக வளாகங்கள், பஸ் நிறுத்தம் ஆகிய பணிகள் அங்கு நடைபெற்று வருவதை மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார். அங்கு நடைபெற்று வரும் பணிகளின் மாதிரி படங்களை காண்பித்து அதிகாரிகள் விளக்கி கூறினார்கள்.

அதன்பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை அருகே மெட்ரோ ரெயில் நிலைய திட்ட பணிகளை பார்வையிட்டார். அங்கு அமைய உள்ள தெள்ளியகரம் மெட்ரோ ரெயில் நிலைய பணிகளை அவர் ஆய்வு செய்தார். அங்கு கட்டிடப் பணிகள் நடைபெற்று வரும் பகுதிக்கு சென்று பார்வையிட்டார். தெள்ளியகரம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் என்னென்ன வசதிகள் உருவாக்கப்பட உள்ளன என்பதை விளக்கும் வரைபடமும் அங்கு வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை காண்பித்தும் முதல்வருக்கு மெட்ரோ ரெயில் நிலைய பணிகளை அதிகாரிகள் விவரித்தார்கள். அப்போது அவர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். மேலும் மெட்ரோ ரெயில் திட்டம் 2-ம் கட்ட வழித்தட பணிகளை விரைந்து செயல்படுத்த மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து