முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கான் தாக்குதல்: ஐ.நா. சபை கண்டனம்

சனிக்கிழமை, 9 அக்டோபர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

ஆப்கானிஸ்தானில் வெள்ளியன்று ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த தற்கொலை தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மத நிறுவனங்களைத் தாக்கும், இந்த வாரத்தில் நடந்த, 3வது தாக்குதல் என்று ஐக்கிய நாடுகள் மன்றம் கூறியுள்ளது. சென்ற ஞாயிற்றுக் கிழமை காபூலில் உள்ள மசூதி ஒன்றில் நடந்த தற்கொலை தாக்குதலில் நூறுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 

மேற்கத்திய படைகள் வெளியேறியதை அடுத்து தாலிபன்கள் ஆட்சிக்கு வந்தபின் நடந்த மிகப்பெரிய தாக்குதல் அது. அதன்பின் புதனன்று இஸ்லாமியப் பாடசாலையான மதரஸா ஒன்றின்மீதும் தாக்குதல் நடந்தது.

_________________

செவ்வாய் கிரகத்தில் நாசா ரோபோ ஆய்வு

செவ்வாயில் உயிரினங்கள் வாழ்ந்திருப்பதற்கான சாத்தியம் குறித்த சமிக்ஞைகளை அளிக்கும் இடத்திலேயே தங்களது ரோபோ ஆய்வு செய்து கொண்டிருப்பதாக இப்போது நாசா விஞ்ஞானிகள் உறுதியாக நம்புகிறார்கள். அதற்கான தடயங்களும் அவர்களுக்குக் கிடைத்திருக்கின்றன.

கடந்த பிப்ரவரி மாதம் "பெர்சி" என்ற செல்லப் பெயரும் அழைக்கப்படும் பெர்சவரென்ஸ் உலவு வாகனம், ஜெசெரோ எரிப் பள்ளத்தில் செவ்வாயின் தரையைத் தொட்டது. அதன் பின்னர் தனது சுற்றுப்புறத்தில் ஆயிரக்கணக்கான படங்களை எடுத்து அனுப்பி வருகிறது.

_________________

இன்ஸ்டாகிராம் சேவையில் மீண்டும் ஏற்பட்ட தடங்கல்

இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சேவைகளில் மீண்டும் ஏற்பட்ட தடங்கல் குறித்து ஃபேஸ்புக் நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது. உலகம் முழுவதும் பலர் ஃபேஸ்புக்கின் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சேவைகள் சில மணி நேரங்களுக்குக் கிடைக்கவில்லை. 

எனினும் கடந்த திங்கள்கிழமையன்று சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக ஏற்பட்ட முடக்கத்துக்கும் இதற்கும் தொடர்பில்லை என ஃபேஸ்புக் விளக்கம் அளித்திருக்கிறது. இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகள் இயங்காதது குறித்து ட்விட்டர் உள்ளிட்ட வேறு சமூக வலைத்தளங்களில் இதுபற்றி ஏராளமானார் பதிவிட்டிருந்தனர்.

______________

அமெரிக்காவில் மேலும் ஒரு காந்தி சிலை திறப்பு

அமெரிக்காவின் தென் பகுதியில் உள்ள மிசுசிப்பி மாகாணத்தில் கிளார்க்ஸ்டேல் என்ற நகரம் உள்ளது. இங்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த முரளி வுல்லாகன்டி என்பவர் பீப்பிள் ஷோர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்திய வம்சாவளியான முரளியின் நிறுவனம் வாயிலாக அங்கு ஏராளமான அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. இதன் வாயிலாக பொருளாதார நெருக்கடியில் இருந்து கிளார்க்ஸ்டேல் நகரம் மீண்டதாக கூறப்படுகிறது.

இதற்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய கலாசார கவுன்சில் சார்பில் மகாத்மா காந்தியின் மார்பளவு வெண்கல சிலை வடிவமைக்கப்பட்டது. சிற்பி ராம் சுதார் என்பவர் இந்த சிலையை வடிவமைத்துள்ளார். இந்த சிலை திறப்பு விழா கிளார்க்ஸ்டேல் நகரில் நடந்தது. கிளார்க்ஸ்டேல் நகர மேயர் சக் எஸ்.பி சிலையை திறந்து வைத்தார்.

______________

டெக்சாஸ்: கருக்கலைப்புக்கு எதிரான தடை தொடரும்

டெக்சாஸ் மாகாணத்தில் கருக்கலைப்புக்கு எதிராகச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 6 வாரங்கள் நிரம்பிய பெண்கள் கருக்கலைப்பில் ஈடுபடக் கூடாது என அச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. டெக்சாஸ் மாகாணத்தை ஆளும் குடியரசுக் கட்சி கொண்டுவந்த இந்தச் சட்டம் அமெரிக்கா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து மனித உரிமை அமைப்புகள், பெண் அமைப்புகள் இச்சட்டத்துக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தின. மேலும், இந்தத் தடையைத் திரும்பப் பெற வேண்டும் என்று அங்குள்ள மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்குத் தொடர்பான மேல்முறையீடு டெக்சாஸ் மாகாணம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த நியூ ஆர்லியன்ஸ் நீதிமன்றம் கருக்கலைப்புக்கு எதிரான தடை தற்காலிகமாகத் தொடரும் எனத் தீர்ப்பளித்துள்ளது. நியூ ஆர்லியன்ஸ் நீதிமன்றத் தீர்ப்புக்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து