முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைத்து பெண் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை: 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பரில் அரையாண்டு தேர்வு : அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

சனிக்கிழமை, 9 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

திருச்சி : தமிழகத்தில் உள்ள அனைத்து பெண் குழந்தைகளையும் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பரில் அரையாண்டு தேர்வு நடத்தப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

உலக பெண் குழந்தைகள் தினவிழா திருச்சி சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில் பங்கேற்ற தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது ஒரு மாணவி, 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் ஆல் பாஸ் என்று போடப்பட்டுள்ளது. இதனால் எங்களின் உயர்கல்வி படிப்பிற்கு பாதிப்பு வருமா? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு அமைச்சர் பதில் அளித்து பேசுகையில், உலகம் முழுவதும் கொரோனா தொற்று உள்ளது. எனவே மாணவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வு வைக்காமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் எந்த பாதிப்பும் வராது என்றார். இதையடுத்து இன்னொரு மாணவி நடப்பு ஆண்டில் தேர்வுகள் நடத்தப்படுமா? என கேட்டார். அதற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழக பள்ளிக்கல்வித்துறை எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு டிசம்பரில் அரையாண்டு தேர்வினையும், அதைத் தொடர்ந்து மார்ச் மாதத்தில் பொதுத்தேர்வினையும் நடத்த முடிவு செய்துள்ளது. முதல்-அமைச்சரின் அனுமதி பெற்று அதற்கான சுற்றறிக்கைகள் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்படும் என்றார்.

பிறகு விழாவில் அவர் பேசியதாவது. எனக்கு 2 மகன்கள் உள்ளனர். ஆனால் பெண் குழந்தைகள் இல்லையே என்ற வருத்தம் இருந்தது. நான் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றபோது மாநிலத்தில் உள்ள அனைத்து பெண் குழந்தைகளும் நமக்கு மகள்களாக வந்து விட்டனர் என்று மனைவியிடம் கூறினேன்.

தமிழகத்தில் உள்ள அனைத்து பெண் குழந்தைகளையும் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். படிப்பதற்கு வறுமை தடையாக இருக்காது. நீங்கள் நன்றாக படித்தால் உயர்கல்வியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்த்துக்கொள்வார் என்றார். விழாவில் பிஷப் ஹீபர் கல்லூரி சைல்டு லைன் அமைப்பின் பொறுப்பாளர் காட்வின் பிரேம்சிங், சேவா சங்க நிர்வாக குழுவின் செயலாளர் சரஸ்வதி, பள்ளி தலைமை ஆசிரியை நாகம்மாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து