முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆயுத பூஜையை முன்னிட்டு ‘பொறி பறக்க’ பொரி தயாரிப்பு: திண்டுக்கல்லில் பணிகள் மும்முரம்

ஞாயிற்றுக்கிழமை, 10 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் ஆயுத பூஜையை முன்னிட்டு அரிசி பொரி தயாரிக்கும் பணி மும்முரம் அடைந்துள்ளது. தென் தமிழகத்தில் பொரி தயாரிப்பில்  திண்டுக்கல் நகருக்கு என்று தனி இடம் உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தை பொருத்தவரை 10க்கும் மேற்பட்ட அரிசி பொரி தயாரிப்பு ஆலைகள் உள்ளது. இங்கு தயாரிக்கப்படும்  பொரியானது லேசான இனிப்பு சுவையோடு மொறுமொறுப்பாக இருக்கும்.  இங்கும் தயாராகும் பொரியை தென்தமிழகத்தில் மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, நாகர்கோவில் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். ஆயுதபூஜை விழாவின்போது படையலில் பொரி முக்கியமாக வைக்கப்படுகிறது. வரும் 14ம் தேதி ஆயுத பூஜை வருவதால் திண்டுக்கல் பகுதியில் தற்போது பொரி தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து திண்டுக்கல்லை சேர்ந்த பொரி தயாரிப்பாளர் மகாராஜன் கூறுகையில், ‘‘இந்த பொரி தயாரிப்புக்கான மூலதன பொருளான நெல் தரமானதாக தேர்வு செய்யப்பட்டு அதில் சீனி மற்றும் உப்பு கலந்து தண்ணீரில் சுமார் 3 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன் பின்னர் சரியான தட்பவெட்ப நிலையில் அதனை காய போட வேண்டும். அவ்வாறு காய போட்டு உலர்த்திய பின்னர் அந்த உலர்ந்த நெல்லை எடுத்து பொரி தயாரிக்கும் இயந்திரத்தில் கொட்டி நெருப்பு மூலம் வெந்து, பின்னர் பொரியாக இயந்திரம் மூலம் வெளியே வருகிறது.

விறகுகள் மூலம் நெருப்பு மூட்டப்படுவதால் பொரியின் மணமும், சுவையும் மாறாமல் அப்படியே இருக்கும். தற்போது ஆயுத பூஜை விழா நெருங்கி வருவதையொட்டி கடந்த 20 நாட்களாக பொரி தயாரிப்பு பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறோம். தற்போது கொரோனா  காலகட்டம் என்பதால் விநாயகர் சதுர்த்தி விழாவின்போது பொரி வியாபாரம் குறைந்தது. ஆயிரம் மூட்டைகள் விற்ற இடத்தில் 600 மூட்டைகளே விற்பனையாகிறது. ஆயுத பூஜைக்கும் ஆர்டர் குறைவாகவே உள்ளது. கடந்தாண்டு ஆயுதபூஜைக்கு 100 லிட்டர் கொண்ட ஒரு மூட்டை ரூ.325 முதல் 330 வரை விற்பனையானது. ஆனால் இந்தாண்டு ரூ.350 முதல் 400 வரை விற்கும் என எதிர்பார்க்கிறேன்’’, என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து