முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் கோவில்களை திறக்க அரசு பரிசீலிக்க வேண்டும் : தெலுங்கானா கவர்னர் வேண்டுகோள்

திங்கட்கிழமை, 11 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : தீனதயாள் சேவை மையம், உலக கலை விளையாட்டு கூட்டமைப்பு, மதுரை ஜெயபிரபா ஜூவல்லரி ஆகியவை இணைந்து தென் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டிகளை நடத்தியது. இதற்கான பரிசளிப்பு விழா மதுரையில் நடந்தது. தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-

மதுரையில் சிலம்பாட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றது உண்மையிலேயே மகிழ்ச்சி தருகிறது. எனக்கும் மதுரைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நான் இங்கு தான் ஆரம்பக்கல்வி பயின்றேன். என் தந்தை அப்போது இங்கு டுட்டோரியல் காலேஜ் நடத்திவந்தார். நான் பள்ளிக்கூடத்தில் சேருவதற்கு முன்பாக மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு எடுத்துச் சென்று இறைவனுக்கு படைத்து விட்டு, அதற்குப் பிறகுதான் பள்ளிக்கூடத்தில் அப்பா சேர்த்து விட்டார்.

பாரம்பரியம் மிகுந்த மதுரை மண்ணுக்கு வந்தது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சி தருகிறது. அதே வேளையில் மதுரைக்கு வந்து மீனாட்சி அம்மனை தரிசிக்க முடியவில்லையே? என்ற வேதனை மனதில் நிலவுகிறது. புதுச்சேரி மாநிலத்தில் கோவில்கள் எல்லாம் திறந்து தான் உள்ளன. மதுரை தெப்பக்குளம் சென்றால் மாரியம்மனை வழிபடாமல் சென்றது இல்லை. ஆனால் இன்றைக்கு மதுரை வந்தும், தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலுக்கு செல்ல முடியவில்லை. எனவே தமிழக அரசு இந்த விஷயத்தில் முடிவை மறுபரிசீலனை செய்தால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து.

மனிதனை உடல் அளவில் மட்டுமின்றி மனதளவிலும் வலிமையாக பழந்தமிழர் விளையாட்டுகள் வைத்திருந்தன. ஆனால் கிரிக்கெட், ஆன்லைன் விளையாட்டுகள் வந்தபிறகு பாரம்பரிய விளையாட்டுகள் படிப்படியாக வழக்கொழிந்து வருகின்றன. அதனை மீட்டெடுக்க வேண்டியது மிகவும் அவசியம். சிலம்பாட்டம் என்பது கலாச்சாரத்துடன் ஒருங்கிணைந்த விளையாட்டு. உடலும் மனமும் ஒருங்கிணைந்து செயல்படாவிட்டால் சிலம்பம் விளையாடுவது சிரமம். 

விளையாட்டுப் போட்டிகளில் புத்திக்கூர்மையுடன் செயல்பட்டால் அடித்து விளையாடலாம் என்பதற்கு சிலம்பம் ஒரு உதாரணம் ஆகும். தமிழர்களுக்கு கத்தி, வாள் மட்டும் ஆயுதம் அல்ல. ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்பார்கள். அதே போல வல்லவனுக்கு கம்பம் ஆயுதம்தான். தமிழகத்தில் மாணவ-மாணவியருக்கு தற்காப்புக் கலைகள் மிகவும் அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து