முக்கிய செய்திகள்

கல்வெட்டில் பெயர் போட்டுக்கொண்டால் பொதுசெயலாளர் ஆகி விட முடியுமா? - சசிகலாவுக்கு ஜெயக்குமார் கேள்வி?

ஞாயிற்றுக்கிழமை, 17 அக்டோபர் 2021      அரசியல்
Jayakumar 2021 08 02

Source: provided

சென்னை : கல்வெட்டில் பெயர் போட்டுக்கொண்டால் மட்டும் அ.தி.மு.க பொதுசெயலாளர் ஆகி விட முடியுமா? என்று சசிகலாவுக்கு ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க. எங்களிடம் தான் கட்சிக்கொடி, சின்னம் இருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டும், தேர்தல் ஆணையமும் இதை தெரிவித்துவிட்டது. அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கிறோம்.

ஒரு கல்வெட்டில் பெயர் போட்டால் அ.தி.மு.க. பொதுசெயலாளர் ஆகிவிட முடியுமா? செஞ்சி கோட்டையில் ஏறியவர்கள் எல்லாம் ராஜா தேசிங்கு ஆகிவிட முடியுமா? மீசை வைத்தவர்கள் எல்லாம் கட்டபொம்மன் ஆகிவிட முடியுமா?

பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா வந்து 8 மாதங்கள் ஆகிறது. அவர் அப்போது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, அண்ணா நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தி இருக்கிறாரா?

பொன்விழா ஆண்டு அடுத்த ஆண்டு வந்தால், அவர் அடுத்த ஆண்டுதான் வெளியே வந்திருப்பார். பொன்விழா எழுச்சியுடனும், ஒற்றுமையுடனும் கொண்டாடப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. பொன்விழா எழுச்சியுடன் கொண்டாடப்படுவது சசிகலாவுக்கு பிடிக்கவில்லை. இத்தனை நாட்களாக வெளியே வராமல் பொன்விழா நடக்கும் போது வெளியே வருவது ஏன்?

1996 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்விக்கு அவர்தான் காரணம். சசிகலாவின் குடும்பத்தினரால் தோல்வி ஏற்பட்டது.

சசிகலா தனது குடும்பம் மட்டுமே பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும், வாழ்க்கைத்தரத்தில் உயர வேண்டும் என்று பாடுபட்டார். கட்சிக்காரர்களை சுரண்டி, சித்ரவதை, கொடுமை செய்ததை யாரும் மறந்து இருக்கமாட்டார்கள்.

வானத்தில் இருந்து குதித்த அவதாரம் போல் நான்தான் புரட்சித்தாய் என்று சொல்கிறார். எம்.ஜி.ஆர்.தான் புரட்சித்தலைவர். ஜெயலலிதாதான் புரட்சித்தலைவி. புரட்சித்தாய் என பெயர் வைத்துக்கொள்ளும் அளவுக்கு சசிகலா என்ன புரட்சி செய்தார்? தனது குடும்பத்துக்காகவே வாழ்ந்தார்.

எத்தகைய வழியில் வந்தாலும் தமிழக மக்களோ அ.தி.மு.க. தொண்டர்களோ ஒருநாளும் கொள்ளை கும்பலை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். புரட்சித் தலைவிதான் நிரந்தர பொதுசெயலாளர். அவர் இல்லாவிட்டாலும் எங்களுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். எங்களை வழிநடத்திக் கொண்டு இருக்கிறார். அவரது நல்லாசியால் கட்சியை வழிநடத்திக் கொண்டு இருக்கிறோம்.

சட்டமன்ற தேர்தலில் 1 சதவீதத்தில்தான் நூலிழையில் தோல்வியை தழுவினோம். அந்த தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தியது. உள்ளாட்சி தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் நடத்தியது.

அ.தி.மு.க. தனித்துவம் மிக்கது. அடையாளம் கொண்டது. அந்த இயக்கத்தில் யாரும் குறுக்கிட முடியாது. அ.தி.மு.க. மாபெரும் சக்தி கொண்டது.

இவ்வாறு ஜெயகுமார் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து