முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. லக்கிம்பூர் வன்முறை சம்பவம்: ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்

திங்கட்கிழமை, 18 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : உ.பி. மாநிலம் லக்கிம்பூர் சம்பவத்தில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டுமென ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்பட்ட பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் சங்கத்தினர் நேற்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரயில் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டது. சுமார் 160 ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 3-ம் தேதி உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரிக்கு மத்திய அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா, உத்தரப்பிரதேசம் துணை முதல்வர் கேசப் பிரசாத் மவுரியா உள்ளிட்டோர் சென்றனர். அவர்களுக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டிய விவசாயிகளுக்கும், பாஜகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் உத்தரப்பிரதேச மாநில காவல்துறையினர், மத்திய அமைச்சர் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா உள்பட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் ஆஷிஸ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் நியாயமான விசாரணை நடக்க மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டம் நடத்த சம்யுக்தா கிசான் மோர்ச்சா விவசாய சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இதனை அடுத்து நாடு முழுவதும் நேற்று ரயில் மறியல் போராட்டத்தில் விவசாயிகள் சங்கத்தினர் ஈடுபட்டனர்.  பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேச மாநிலங்களில் ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. 

விவசாயிகளின் போராட்டத்தை முன்னிட்டு நேற்று நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஹரியானாவில் உள்ள ரயில் நிலையங்களில் பாதுகாப்புப் பணியில் விரைவு அதிரடிப் படையினர் நிறுத்தப்பட்டனர். தடையை மீறி போராட்டம் நடத்திய விவசாயிகள் பலர் கைது செய்யப்பட்டனர். வடக்கு ரயில்வே மண்டலத்தில் 30 இடங்களில் 8 ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டதாக வடக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

உத்தரபிரதேசத்தில் ஏற்கனவே 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால், விவசாயிகளின் ரயில் மறியல் போரட்டத்தை முன்னிட்டு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தடை உத்தரவுகளை மீறுபவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் அம்மாநில காவல்துறையினர் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வடமேற்கு ரயில்வே மண்டலத்தில், ராஜஸ்தான் மற்றும் ஹரியாணாவில் சில பகுதிகளில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 2 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன, 13 பகுதி ரத்து செய்யப்பட்டன. ஒன்று போராட்டத்தின் காரணமாக திருப்பி விடப்பட்டது. ராஜஸ்தானில், பிகானிரில் ஹனுமங்கர் மற்றும் ஸ்ரீகங்காநகர் ஆகிய இடங்களில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வடக்கு ரயில்வே மண்டலத்தில் ரயில்களில் சண்டிகர்- ஃபெரோஸ்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. லூதியானாவில் இருந்து புறப்பட வேண்டிய ஃபெரோஸ்பூர்-லூதியானா எக்ஸ்பிரஸ் போராட்டத்தால் இயக்கப்படவில்லை.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி பிரசாந்த் குமார் தெரிவிக்கையில், விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டத்தால் பஞ்சாப், ஹரியாணா மற்றும் ராஜஸ்தானில் 130 இடங்களில் ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டன. மொத்தமாக 160 ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து