முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் தொடரும் கனமழை: திருவனந்தபுரம், எர்ணாகுளம் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்'

செவ்வாய்க்கிழமை, 19 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

திருவனந்தபுரம் : கேரளத்தில் கனமழை தொடர்ந்து பெய்துவரும் நிலையில் 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பலி எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.

கேரளத்தில் பெய்துவரும் தென்மேற்கு பருவமழையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் கனமழையை பெற்றுள்ளன. திருவனந்தபுரம், கோட்டயம், இடுக்கி, பத்தினம்திட்டா உள்ளிட்ட பகுதிகளில் பெய்த பலத்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து பெய்துவரும் கனமழையிலிருந்து மக்களைப் பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. 

இந்நிலையில் 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருவனந்தபுரம், பத்தினம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் காசர்கோடு, ஆலப்புழா, கொல்லம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் 24 மணி நேரத்தில் 6 செ.மீ. முதல் 20 செ.மீ. வரையிலான மழை அளவு பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே கோட்டயம் மற்றும் இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழையால் பலர் வீடு உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். எங்கெங்கு காணினும் வெள்ளமாக காட்சியளிக்கிறது. இந்த நிலையில் இன்று முதல் மீண்டும் தொடர் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. அம்மாநிலத்தில் உள்ள முக்கிய அணைகளான இடுக்கி, இடமலையார், பம்பை ஆகியவற்றில் நீர்வரத்து அதிகமுள்ள நிலையில் அவற்றின் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. பாதுகாப்பு கருதி கரையோரப் பகுதிகளில் வசிக்கும் 2 ஆயிரத்து 500 குடும்பங்களை சேர்ந்த சுமார் பத்தாயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். 240 முகாம்கள் அமைக்கப்பட்டு அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பூவாஞ்சி, கோக்கயார் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஏழு வீடுகள் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. அங்குள்ள மணிமாலா ஆற்றிலிருந்து 6 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பல இடங்களில் மின் இணைப்பு இல்லாததால் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். எங்கும் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யக்கூட இடம் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இதற்கிடையே கேரளாவில் மழை வெள்ளத்திற்கு பலி எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து