முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டில் மேலும் 300 புதிய விமான நிலையங்களை அமைக்க திட்டம் : பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

புதன்கிழமை, 20 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

லக்னோ : உத்தரப்பிரதேச மாநிலத்தில் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி நாட்டில் மேலும் 300 புதிய விமான நிலையங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். அங்கு திரண்டிருந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி கூறியதாவது.,

உலகெங்கிலும் உள்ள புத்த சமுதாயத்தினரின் நம்பிக்கை கேந்திரமாக இந்தியா திகழ்கிறது. குஷிநகர் சர்வதேச விமான நிலையம், அவர்களது பக்திக்குச் செலுத்தப்படும் காணிக்கை . புத்தபிரான் ஞானம் பெற்றது முதல் மகாபரிநிர்வாணம் அடைந்தது வரையிலான ஒட்டு மொத்த வாழ்க்கைப் பயணத்திற்கும் இந்த சுற்றுவட்டாரப் பகுதி, சான்றாக திகழ்கிறது . முக்கியமான இந்தப் பகுதி இன்று உலகுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது.

குஷிநகரை மேம்படுத்துவது உத்தரப்பிரதேசம் மற்றும் மத்திய அரசுகளின் முன்னுரிமைப் பணிகளில் ஒன்றாக உள்ளது. நம்பிக்கை அல்லது பொழுதுபோக்கு என சுற்றுலாவை அதன் அனைத்து வகைகளிலும் மேம்படுத்த, ரயில், சாலை, விமானம், நீர்வழிப் போக்குவரத்துகள், ஓட்டல், மருத்துவமனை, இணையதள இணைப்பு, சுகாதாரம், கழிவு சுத்திகரிப்பு மற்றும் தூய்மையான சுற்றுச்சூழலை உறுதி செய்ய புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான நவீன கட்டமைப்பு வசதிகளை முழுமையாக மேற்கொள்வது அவசியம்.

இவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்பதோடு இந்தப் பணிகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்வது முக்கியம். தற்போதைய 21 ஆம் நூற்றாண்டு இந்தியா, இத்தகைய அணுகுமுறையுடன்தான் சென்று கொண்டிருக்கிறது. உடான் திட்டத்தின் கீழ் கடந்த சில ஆண்டுகளில் 900-க்கும் மேற்பட்ட புதிய வழித்தடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 350 வழித்தடங்கள் ஏற்கெனவே செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இதுவரை பயன்படுத்தப்படாமல் இருந்த 50-க்கும் மேற்பட்ட புதிய விமான நிலையங்களும் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும் 300 புதிய விமான நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன. 

உத்தரப்பிரதேச மாநிலத்தில், விமானப் போக்குவரத்து வசதிகள் படிப்படியாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் குஷிநகர் விமான நிலையத்திற்கு முன்பாகவே 8 விமான நிலையங்கள் இயங்கி வருகின்றன. லக்னோ, வாரணாசி மற்றும் குஷிநகரை தொடர்ந்து ஜேவார் சர்வதேச விமான நிலையப் பணிகளும் நடைபெற்று வருகிறது. இவைத் தவிர அயோத்தியா, அலிகார், ஆஸம்கர், சித்ரகூட், மொரதாபாத் மற்றும் ஸ்ரவாஸ்தியிலும் விமான நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து