முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களுக்கு இடையூறாக சாலையை மறித்து போராட்டம் நடத்தக்கூடாது: விவசாயிகள் தொடர்ந்த மனுவில் சுப்ரீம் கோர்ட் கருத்து

வியாழக்கிழமை, 21 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

மக்கள் இடையூறாக அவர்கள் பயன்படுத்தும் சாலையை மறித்துப் போராட்டம் நடத்தக்கூடாது என்று விவசாயிகள் சார்பில் தொடர்ந்த மனுவில் சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியின் புறநகர் பகுதிகளில் உள்ள சாலையில் அமர்ந்து கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாகப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் அமைதியான முறையில் 200 விவசாயிகள் சத்யாகிரஹப் போராட்டம் நடத்தப் போகிறோம். அதற்கு அனுமதி வழங்கக் கோரி அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி விவசாயிகள் மற்றும் வேளாண்ஆர்வலர்கள் அமைப்பான கிசான் மகாபஞ்சாயத்து சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு சுப்ரீம் கோர்ட் நீதிபதி எஸ்எஸ் கவுல் தலைமையில் அமர்வில் நேற்று விசாரிக்கப்பட்டது. விவசாயிகள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே, பிரசாந்த் பூஷன் ஆஜராகினர். ஹரியாணா அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகினார். விவசாயிகள் தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர்கள் வாதிடுகையில் “ விவசாயிகள் போராட்டம் செய்யத் தொடங்கியதும் வேண்டுமென்றே மக்களின் அதிருப்தியை விவசாயிகள் பக்கம் திருப்ப அரசுதான் தடைகளை சாலைகளை உருவாக்குகிறது. ஆதலால், ராம் லீலா மைதானத்திலும், ஜந்தர் மந்தரிலும் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.

இதற்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கடும் எதிர்ப்புத் தெரிவித்து, “ கடந்த ஆண்டு சுதந்திரத்தன்று நடந்த வன்முறை நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். ஏராளமானோர் காயமைடைந்தனர், பலர் கொல்லப்பட்டனர்” எனத் தெரிவித்தார்.

 

இதைக் கேட்ட நீதிபதி கவுல் அமர்வு “ விவசாயிகள் போராட்டம் நடத்துவதில் பிரச்சினை இருக்கிறது.நாங்கள் எந்த பிரச்சினையையும் ஏற்கவும் தயாரில்லை. கடந்த 2 ஆண்டுகளாக அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே நடக்கும் பிரச்சினைக்குதீர்வு தேவை. இந்த நீதிமன்றம் ஏற்கெனவே ஷாகீன் பாக் போராட்டம் தொடர்பான வழக்கிலேயே கூறிவிட்டது. போராட்டம் நடத்த உரிமை இருக்கிறது, ஆனால், மக்கள் சுதந்திரமாக நடமாடும் உரிமையை பாதிக்கக்கூடாது எனத் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே கூறிவிட்டதால், மீண்டும் மீண்டும் அதைக் கூற எந்தக் காரணமும் இல்லை. அதேநேரம் சில தீர்வுகளும் தேவை, சாலைகளை மறித்து போராடக்கூடாது” எனத் தெரிவித்து விவசாயிகள் தொடர்ந்த மனுவின் விசாரணையை டிசம்பர் 7-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து