முக்கிய செய்திகள்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நவ. 1,2,3-ம் தேதிகளில் ரேஷன் கடைகள் காலை 8 முதல் இரவு 7 மணி வரை செயல்படும் : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை : தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நவ. 1,2,3-ம் தேதிகளில் ரேஷன் கடைகள் காலை 8 முதல் இரவு 7 மணி வரை செயல்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வருகின்ற நவம்பர் 4-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அனைத்து பொருட்களும் தடையின்றி கிடைக்க உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி உத்தரவிட்டு இருந்தார்.

இதுதொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நவம்பர் 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு ரேஷன் கடைகள் கூடுதல் நேரம் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, காலை 8 முதல் இரவு 7 மணி வரை கடைகளை திறந்து வைத்து பொருட்களை விநியோகிக்க வேண்டும் என்றும், எடையாளர்கள் பற்றாக்குறை இருந்தால் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் உட்பட தன்னார்வலர்களை நியமித்து, பொதுவிநியோக திட்ட பணிகள் துரிதமாகவும் சீராகவும் நடைபெற வழிவகை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், ரேஷன் கடைகளில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் பொருட்கள் வாங்கிச் செல்வதை உறுதி செய்வதுடன், இதுதொடர்பாக வட்ட அளவில் கண்காணிப்பு அலுவலர்களை நியமிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தீபாவளிக்கு முன்பு ரேஷன் பொருட்களை வாங்க முடியாதவர்கள் நவம்பர் 8-ம் தேதிக்குப் பின்பு பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து