முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சசிகலா இன்று மதுரை வருகை: கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு நாளை மாலை அணிவிக்கிறார் : 30-ம் தேதி பசும்பொன் செல்கிறார்

புதன்கிழமை, 27 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : மதுரைக்கு இன்று மாலை வரும் சசிகலா அ.தி.மு.க. பிரமுகர்கள் சிலரை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதால் அ.தி.மு.க.வினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான வி.கே. சசிகலா கடந்த 17-ந் தேதி அ.தி.மு.க. பொன்விழா கொண்டாட்டங்களில் பங்கேற்றார்.

அப்போது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்று பொறிக்கப்பட்ட கல்வெட்டினை திறந்து வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அ.தி.மு.க. தொண்டர்களை சந்திக்கப்போவதாக அறிவித்துள்ள சசிகலா நேற்று முன் தினம் திட்டமிட்டபடி தனது சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார்.

சசிகலாவை சுற்றுப்பயணத்தின்போது அ.ம.மு.க. நிர்வாகிகள் அவரை வரவேற்க பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

மதுரையில் நாளை 29-ந் தேதி நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவில் சசிகலா பங்கேற்று பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்த திட்டமிட்டுள்ளார்.

இதற்காக சசிகலா இன்று (வியாழக்கிழமை) தஞ்சையில் இருந்து கார் மூலம் மதுரை வருகிறார். மதுரை அழகர்கோவில் ரோட்டில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அவர் தங்குகிறார். முன்னதாக மதுரையில் பல்வேறு இடங்களில் அ.ம.மு.க. நிர்வாகிகள் மற்றும் சசிகலா ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு கொடுக்க திட்டமிட்டுள்ளனர்.

ஓட்டலில் தங்கி ஓய்வெடுக்கும் சசிகலா மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த தனது ஆதரவாளர்களான அ.தி.மு.க. பிரமுகர்கள் சிலரை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு செல்போனில் அ.தி.மு.க. பிரமுகர்களிடம் சசிகலா பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

அப்போது அ.தி.மு.க. இயக்கத்தை எப்படியாவது மீட்டு மீண்டும் ஒரு கட்டுக்கோப்பான கட்சியாக மாற்றியே தீருவேன் என்று சபதம் செய்தார்.

அதன் தொடர்ச்சியாக அ.தி.மு.க.வில் உள்ள தனது ஆதரவாளர்களை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். இதனால் சசிகலாவை சந்திக்க இருக்கும் அ.தி.மு.க. பிரமுகர்கள் யார் யார் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

சசிகலா நாளை (29-ந்தேதி) காலை 7 மணியளவில் ஓட்டலில் இருந்து புறப்பட்டு காரில் கோரிப்பாளையம் வருகிறார். அங்குள்ள பசும்பொன் முத்துராமலிங்க சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருதுபாண்டியர்களின் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னுக்கு புறப்பட்டு செல்கிறார்.

பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் காரில் தஞ்சை புறப்பட்டு செல்கிறார்.

மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள சசிகலா அடுத்தடுத்து என்ன நடவடிக்கைகளில் இறங்குவார் என்பதை அறிய அதிமுக நிர்வாகிகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் அ.தி.மு.க. சார்பில் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை வரவேற்று மதுரையில் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் அ.ம.மு.க., ஆதரவாளர்கள் சசிகலாவை வரவேற்றும் சுவரொட்டிகளை ஒட்டி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து