முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் 3 பேர் கொண்ட நிபுணர் குழு : சுப்ரீம் கோர்ட் அமைத்தது

புதன்கிழமை, 27 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்ட புகாரில், சிறப்பு நிபுணர் குழு விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.

பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அரசு அதிகாரிகள், தேர்தல் ஆணையர்கள் என நாட்டின் முக்கிய பொறுப்புகளில் இருக்கக்கூடியவர்களின் செல்பேசிகள், பெகாசஸ் என்ற மென்பொருள் மூலமாக உளவு பார்க்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதையடுத்து, இந்த விவகாரத்தை விசாரிக்கக்கோரி வழக்கறிஞர் சர்மா, மூத்த பத்திரிக்கையாளர் என்.ராம் உள்ளிட்ட பலரும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நேற்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஹிமா ஹோலி ஆகியோர் கொண்ட அமர்வு இடைக்கால தீர்ப்பினை வழங்கியது. 

நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது சம்பந்தமான விஷயத்தை ஆய்வு செய்வதற்காக நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இது அரசியலமைப்பு வழங்கி இருக்கக்கூடிய அடிப்படையான விஷயங்கள் குறித்த விவகாரம். எனவே, இதில் அரசியல் சார்ந்தது இல்லாமல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது தொடர்பான விஷயங்களை ஆராய உள்ளோம் என்று தலைமை நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

இந்த விவகாரத்தில் மனு தாக்கல் செய்தவர்கள் நிறைய பேர் நேரடியாக உளவு பார்க்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள். இந்தியாவில் தனியுரிமையைப் பாதுகாப்பது என்பது மிகவும் அவசியம். எனவே, இந்த விவகாரத்தில் தொழில்நுட்பங்களை ஒழுங்குபடுத்துவது மத்திய அரசின் தலையாய கடமை என மத்திய அரசுக்கு அறிவுரை வழங்கிய தலைமை நீதிபதி, 'நாம் தொழில்நுட்ப யுகத்தில் வாழ்கிறோம். வளர்ச்சி எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு தனிமனித உரிமைகளும் முக்கியம்.

பத்திரிக்கையாளர்கள் மட்டுமல்ல, அனைத்து குடிமக்களின் தனிநபர் ரகசியங்கள் காக்கப்பட வேண்டும். விரிவான தகவல்களை கொண்ட பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு கால அவகாசம் வழங்கியிருந்தோம். இருப்பினும், அவர்கள் அதனை செய்யவில்லை. அதனைச் செய்திருந்தார்கள் என்றால், எங்கள் பணி குறைவாக இருந்திருக்கும். தற்பொழுது அந்தப் பொறுப்பு எங்களிடம் வந்திருக்கிறது என்று தீர்ப்பில் குறிப்பிட்டார்.

தேசியப் பாதுகாப்பு என்ற விஷயத்தைக் கையில் எடுத்துக்கொண்டு வரும் மத்திய அரசுக்கு அனைத்திலும் விலக்கு அளிக்க முடியாது. நீதித்துறை மறு ஆய்வுக்கு எதிராக தேசியப் பாதுகாப்பைக் காரணம் கூறி சாதாரணமாகத் தடை விதிக்க முடியாது. இங்கு மத்திய அரசு தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்தியிருக்க வேண்டும், நீதிமன்றத்தை வாய்மூடிப் பார்வையாளனாக ஆக்கிவிடக் கூடாது.

தனியுரிமைக்கான கட்டுப்பாடு என்பது அவசியம்தான். ஆனால், அது அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு செய்யப்பட வேண்டும். உலகில் பயங்கரவாதத்தை தடுப்பதற்காக தனியுரிமை கட்டுப்படுத்தப்படுகிறது. ஆனால், அது இறுதியாக செய்யப்பட வேண்டிய விஷயம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்று தலைமை நீதிபதி தனது தீர்ப்பில் அழுத்தமாகக் கூறினார்.

கண்காணிப்பு என்ற பெயரில் செய்யப்படக்கூடிய கட்டுப்பாடுகள் தனியுரிமையை பாதிக்கக் கூடியது என்பதை மறுப்பதற்கில்லை. அதுவும் பத்திரிகைகள் உள்ளிட்டவை கண்காணிக்கப்படும்போது, அவை இத்தகைய தொழில்நுட்பங்களால் பாதிக்கப்படக் கூடியதாக அமைந்துவிடும். மத்திய அரசின் தெளிவான நிலைப்பாடு இல்லாததால், இந்தியர்களை வெளிநாட்டு நிறுவனங்கள் கண்காணிப்பது கவலை தருவதாக உள்ளது என பல முக்கியமான கருத்துகளையும் அவர் கூறினார்.

பின்னர் இந்த விவகாரத்தில் மத்திய அரசு மறுப்பு எதையும் தெளிவாக தெரிவிக்காததால், மத்திய அரசு அமைத்தக் குழுவை அங்கீகரிக்க மறுப்பதாகவும், தனிப்பட்ட முறையில் சுதந்திரமாக இயங்கும் குழு அமைக்க வேண்டும் என்ற மனுதாரர்களின் கோரிக்கையை தாங்கள் ஏற்பதாகவும், அதனடிப்படையில உண்மையைக் கண்டறிய குழு அமைக்கப்படுவதாக கூறிய தலைமை நீதிபதி, தனியுரிமை மீறல் நடந்துள்ளதா என்பது குறித்து இந்தக் குழு ஆய்வு செய்யும் என்று தெரிவித்தார்.

ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஆர்.வி.ரவீந்தரன் தலைமையில் 3 பேர் குழு அமைக்கப்படுவதாகவும், இந்தியாவின் உளவு அமைப்பான 'ரா' அமைப்பின் முன்னாள் தலைவர் அலோக் ஜோஷி மற்றும் சர்வதேச மின்னணு தொழில்நுட்ப ஆணையத்தின் தலைவராக இருக்கக்கூடிய டாக்டர் சுதீப் ஓப்ராய் ஆகியோரும் குழுவில் இடம்பெறுவதாகவும் தீர்ப்பில் குறிப்பிட்டார்.

இந்தக் குழுவிற்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை மேற்கொள்ள, குஜராத்தில் உள்ள தேசிய தடயவியல் பல்கலைக்கழகத்தின் சைபர் செக்யூரிட்டி பிரிவின் தலைவராக உள்ள டாக்டர் நவீன் குமார் சவுத்ரி, கேரளாவில் உள்ள அமிர்தா விசுவ வித்யாபீடம் பொறியியல் கல்லூரியின் பேராசிரியர் பிரபாகரன் மற்றும் மும்பையில் உள்ள ஐஐடி நிறுவனத்தின் கணிப்பொறி அறிவியல் பிரிவின் பேராசிரியர் அஷ்வின் அணில் குமஸ்தே ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தக் குழு அடுத்த 8 வாரத்திற்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். இந்தக் குழுவானது, குற்றச்சாட்டுகளில் வருவதுபோல உளவு பார்க்கப்பட்டதா? என்ன காரணத்திற்காக உளவு பார்க்கப்பட்டது? சர்வதேச நிறுவனங்கள் இதன் பின்னணியில் இருக்கிறார்களா? மத்திய அரசுக்கு உளவு பார்க்கப்பட்ட விவகாரம் தெரியுமா? மத்திய அரசுதான் உளவு பார்த்ததா? இப்படியாக முன்வைக்கப்பட்ட முக்கியமான கேள்விகள் தொடர்பான விரிவான விசாரணையை மேற்கொள்ளவுள்ளது குறி்ப்பிடத்தக்கது.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்தனர்.

இதனிடையே சுப்ரீம் கோர்ட் உத்தரவு மகிழ்ச்சியளிக்கிறது, வரவேற்கிறேன் என்று மனுதாரரும் மூத்த பத்திரிகையாளருமான என்.ராம் கருத்து தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து